முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த நிதியுதவியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற சரவணன், முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த நிதியுதவியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற  சரவணன், முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி

புதன், ஜூன் 29,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதாவை இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. S. சரவணன்,  தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, தனது கல்விச் செலவுக்கான அனைத்து உதவிகளையும் வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து, ஆசி பெற்றார்.

ஈரோடு மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான திரு. s. சரவணன், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில், மாநிலத்திலேயே முதலிடம் பெற்றமைக்காக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் 2005-ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றிருந்தார்.

பின்னர், 2007-ஆம் ஆண்டு +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, சென்னை MIT-யில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைத்தும், குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலை காரணமாக திரு. சரவணன் மேற்கொண்டு படிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். அதனை அறிந்த கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, திரு. சரவணன் நான்கு ஆண்டுகள் கல்வி பயில்வதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக்கொண்டு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து நிதியுதவி வழங்கிய நிலையில், அதிக மதிப்பெண்களுடன் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற திரு. சரவணன், இந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை  திரு. சரவணன், அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து, தனது கல்விச் செலவிற்கான அனைத்து உதவிகளையும் வழங்கி, தாயுள்ளத்துடன் தன் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ள முதலமைச்சருக்கு தனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்து, ஆசி பெற்றார். அதே போல், அவரது குடும்பத்தினரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.