முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி,  மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

செவ்வாய், நவம்பர்,24-2015

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, தமிழகம் முழுவதும், மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர் திரு. R.B.உதயகுமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 24 மணி நேரமும் செயல்பட்டு, உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அமைச்சர் திரு. R.B.உதயகுமார் தலைமையில், ஒரு அவசரகாலக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து போர்க்கால அடிப்படையில் இயங்கும் இக்குழுவில், இரண்டு துணை ஆணையர்கள், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள், இரண்டு தட்டச்சர்கள் மற்றும் மூன்று எழுத்தர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, 24 மணி நேரமும் செயல்பட்டு, வானிலை ஆய்வு மையத்திலிருந்து மழை நிலவரம் குறித்து பெறும் அறிக்கைகளையும், மாவட்ட அளவில் மழை வெள்ளம் குறித்து பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்களையும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதைக் கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் குறித்த புகார்களைத் தெரிவிக்க சென்னைவாசிகள் 1070 என்ற எண்ணையும், பிற மாவட்டங்களில் வசிப்போர் 1077 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.