முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் : மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் : மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்

சனி, மார்ச் 05,2016,

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயுஷ் மருத்துவ சேவைகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மேயர் சைதை துரைசாமி நிதிநிலை அறிவிப்பில் சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மருந்தகங்கள் மண்டலத்திற்கு ஒன்று வீதம் ஏற்படுத்தப்படும் எனவும், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஓமியோபதி மருத்துவ சேவைகள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் மற்றும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 1-15 மற்றும் ரிப்பன் வளாகத்திற்கு தேவையான ஆயுர்வேதா, யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஓமியோபதி ஆரம்பிக்கவும், முதற்கட்டமாக இந்த ஒருங்கிணைந்த மருத்துவ வசதிகளை வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு ஆகிய 3 வட்டார பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு மண்டலத்தில் (மூன்று மண்டலங்களில்) மற்றும் ரிப்பன் வளாகத்தில் முதற்கட்டமாக ஏற்படுத்தவும், மேலும் மற்ற மண்டலங்களில் படிப்படியாக இந்த மருத்துவ வசதிகளை விரிவுப்படுத்தவும், மேலும் ஆயுர்வேதா, யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஓமியோபதி வசதிகளை ஏற்படுத்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கீழ்க்கண்ட நகர்ப்புற சமுதாயநல மையங்களில் முதற்கட்டமாக ஒருங்கிணைந்த ஆயுர்வேதா, யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி வசதிகள் மேயர் சைதை துரைசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆயுஷ் மருத்துவமனைகள்

இந்த மருத்துவமனைகளில் தனித்தனியே ஆயுர்வேதா, யோகா இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் மாநகராட்சி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பொதுமக்கள் இந்திய மருத்துவ சேவைகளை மிகவும் விரும்பி பயன்பெற்று வரும் சூழ்நிலையில் இந்த ஆயுஷ் மருத்துவமனைகள் புதியதாக திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மண்டலம்-4-ல் ஆயுஷ் மருத்துவமனை ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியால் மீனாம்பாள் நகரில் நடத்தப்பட்டு வரும் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை படுக்கை வசதிகள் கொண்டு ஏற்கனவே ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவமனையாகும். இங்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே, இங்கு செயல்படும் ஆயுஷ் மருத்துவமனையில் அதிக அளவில் பொதுமக்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.

மண்டலம்-10-ல் ஆயுஷ் மருத்துவமனை, லலிதாபுரம் மாநகராட்சி மருத்துவமனை தி.நகர் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயனாளிகள் வந்து செல்வது எளிதாக இருக்கும்.

மண்டலம்-13-ல் ஆயுஷ் மருத்துவமனை திருவான்மியூர், நகர்ப்புற சமுதாய நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும், நகர்ப்புற சமுதாய நல மையம் செயல்பட்டு வருவதால், இங்கும் பயனாளிகள் அதிக அளவில் பயன்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இனிவருங்காலங்களில் இந்த மருத்துவ சேவைகளானது படிப்படியாக அனைத்து மண்டலங்களுக்கும் விரிவு செய்யப்பட உள்ளது.