முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை:சென்னையில் திரும்புகிறது இயல்பு நிலை: தமிழக அமைச்சர் வளர்மதி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை:சென்னையில் திரும்புகிறது இயல்பு நிலை: தமிழக அமைச்சர் வளர்மதி தகவல்

 

புதன்,நவம்பர்,25-2015

 

                  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதன் மூலம் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள், சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் வளர்மதி கூறும்போது, ”சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பணிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடகிழக்குப் பருவ மழையால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவ மழையை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மாவட்ட ஆட்சியகம் என மூன்றும் இணைந்து பல்வேறு பணிகளில் நிலையை சமாளித்து வருகிறது.

சென்னை மாநகராட்சி பிற துறைகளின் உதவியுடன் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை முழுமையாக வெளியேற்றி உள்ளது. வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகம், திருமண மண்டபங்கள் மற்றும் இதர கட்டிடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 41 முகாம்களில் 6136 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1லட்சத்து 22 ஆயிரத்து 890 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட 6 சுரங்கப்பாதைகளும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் போர்க்கால அடிப்படையில் மழையால் ஏற்பட்ட 1,577 சிறு பள்ளங்களை 10,755.1 ச.மீ அளவுக்கு சரிசெய்யப்பட்டதோடு, தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி இன்று கூடுதலாக 1700 மெட்ரிக் டன் குப்பை மற்றும் கழிவை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த குப்பை வாகனங்களை பராமரிப்பதற்கும், குப்பைகளை அகற்றுவதற்கும் ஏற்கெனவே 2000 களப்பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர்.

தற்போது பெய்த மழையின் காரணமாக இன்னும் கூடுதலாக 2500க்கும் மேல் தினசரி ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு குப்பை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக 185 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் 225 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கொசுக்களை ஒழிக்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.