முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை

வியாழன் , மே 26,2016,

கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், முதல் நாளிலேயே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்குப் பின்னர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், தற்போது கோடை விடுமுறை முடிந்து, வரும் அடுத்த மாதம் 1ம் தேதி, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றே மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2,350 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்புவரை பயிலும், 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி திறக்கும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் வகையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய இடங்களிலிருந்து பாடப்புத்தகங்கள் மற்றும் விலையில்லா சீருடைகள் பிரித்து அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் மற்றும் விலையில்லா சீருடைகள் அந்தந்தப் பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, வரும் 1-ம் தேதியன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 16,722 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக கல்வித்துறை அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்ட புத்தகங்கள், நாகர்கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து, வரும் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், அன்றே மாணவர்களுக்கு வழங்கப்படும் என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.