முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

புதன், ஏப்ரல் 27,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்படைந்துள்ள அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஏற்கெனவே கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி முன்னிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளை இளங்கோவன் பேசினார். இது அ.இ.அ.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், குடவாசல், பூந்தோட்டம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை ஆர்.கே.நகரில் பல இடங்களில் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசி மேடு, வைத்தியநாதன் பாலம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.