முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

புதன், டிசம்பர் 07,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில்;

திரைப்பட உலகில் கதாநாயகியாக 120-க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் எய்தியவர் ஜெயலலிதா. அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெயலலிதாவை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. பொருளாளரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இவெளியிட்ட இரங்கல் செய்தியில்;

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தின் பேரிழப்பாகும். தி.மு.க. சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் போராட்ட குணத்தை கண்டு வியக்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். அந்த விழாவில் இருக்கை போடுவதில் பிரச்சினை எழுந்தது. இருப்பினும் இதுகுறித்து அறிந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதற்கு வருத்தம் தெரிவித்தார். அவருடைய செயல் பெருந்தன்மையை நினைத்து பெருமையடைந்தேன். தி.மு.க. எதிரி கட்சியாக இல்லாமல் எப்போதும் எதிர்கட்சியாக ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு துணை நிற்போம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:–

அம்மா, அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது, ஜெ என்ற பெருமை ஆண்டிருந்தது, தற்போது வெறுமை தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது.

ஒரு துணிச்சலை துணிச்சலாக கொண்டு செல்லும் துணிச்சல் மரணத்திற்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன், அழுதும் கொண்டிருக்கிறேன். தமிழக பா.ஜ.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர்:–

அ.தி.மு.க. தொண்டர்களால் ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர். துணிச்சலும், மன தைரியமும், விடாமுயற்சியும், நிர்வாக திறனும், அறிவாற்றலும் நிறைந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். காலத்திலும், அவர் மறைந்த பிறகும் ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றிவன் என்பதால் அவரது மறைவு எனக்கு மிகுந்த மனத்துயரத்தை தருகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அ.தி.மு.க. நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ப.சிதம்பரம்:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் லட்சக்கணக்கான தமிழக மக்கள் அடைந்துள்ள துயரில் நானும் பங்கேற்கிறேன். அவரது அரசுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று நாட்டில் சிறந்து நிர்வகிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்தது.

அவரது மறைவு லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு பேரிழப்பாகும். நிரப்ப முடியாத வெற்றிடத்தை அவர் மறைவு ஏற்படுத்திவிட்டது. எனினும் இன்னும் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசை நடத்தி செல்ல வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.வுக்கும், அதன் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ:–

ஜெயலலிதா சிவகங்கை அரசி வேலு நாச்சியாரை போன்ற போர்க்குணம் மிக்கவர். எந்த அச்சுறுத்தலுக்கும், எக்காலத்திலும் அஞ்சாதவர். மைசூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கன்னட வெறியர்கள் சூழ்ந்து கெர்ணடு, ‘தமிழ் ஒழிக’ என முழக்கம் இட சொல்லி அச்சுறுத்தியபோது, ‘நான் ஒரு தமிழச்சி; என் உயிர் போவதானாலும் சரி; தமிழ் வாழ்க என்று தான் கூறுவேன்’ என்று கர்ஜித்தவர்.

கோடானுகோடி ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்து, இலவச அரிசி முதல் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.

கோடானுகோடித் தமிழர்கள் குறிப்பாகத் தாய்மார்கள், தங்கள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல வேதனையில் வாடித் தவிக்கின்றார்கள்.

தாயை இழந்த சேயைப் போல கண்ணீர் விட்டு கதறும் அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும் ம.தி.மு.க. சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்:–

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் அனைத்து வழிகளிலும் குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. எதிர்நீச்சலும், போராட்டமும் அவரது வாழ்க்கையாக இருந்தது. தமிழகத்தின் முதல்–அமைச்சராக நான்கு முறையும், எதிர்க்கட்சி தலைவராக இரு முறையும் பதவி வகித்த ஜெயலலிதா, அவரது பதவிக்காலத்தில் பலமுறை முத்திரை பதித்து இருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவு அ.தி.மு.க.வினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.

ஜி.கே.மணி:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளித்துள்ளது. துணிச்சல் மிக்க இரும்பு மங்கையாக செயல்பட்ட அவர் பல சோதனைகளை சந்தித்து வெற்றிகளை பெற்றவர்.

அவரை இழந்து மீளாத் துயரில் வாடும், அ.தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணத் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அ.தி.மு.கவினருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:–

பல்வேறு அரசியல் சூழல்களால் நான் அவரை விமர்சித்து இருந்தாலும், தனிப்பட்ட முறையில் என்மீது மிகவும் அன்போடு இருப்பார். மிகுந்த துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட அவர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை திறம்பட எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தவர். அவரை தமிழகத்தின் இந்திராகாந்தி என்றால் அது மிகையாகாது.

ஜி.ராமகிருஷ்ணன்:–

தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்து இருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர்.

தமிழகத்தினுடைய மாநில உரிமைகளை பெறுவதில் போராடி வெற்றி கண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை உரித்தாக்குகிறேன்.

இரா.முத்தரசன்:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டுவதில் நெஞ்சுறுதியுடன் போராடினார். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சாதாரண ஏழை–எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி சாதனை படைத்தார்.

அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்:–

ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா திகழ்ந்தார். ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மறைவு அ.தி.மு.க.வினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொல்.திருமாவளவன்:–

ஜெயலலிதா மறைவு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. சாதி, மதம், மொழி–இனம் போன்ற வளையங்களை மீறி அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்கிற பேராற்றலைக் கொண்டவராக விளங்கியவர்.

தனது கட்சியையும், தொண்டர்களையும் தமிழக மக்களையுமே தனது குடும்பமாகக் கருதி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருடைய இழப்பு எவ்வகையிலும் எவராலும் ஈடுசெய்ய இயலாததாகும்.

ஆர்.சரத்குமார்:–

தாயை இழந்த உணர்வில் வாடும் தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. சகோதர, சகோதரிகளுக்கும் ஆறுதல் கூற எம்மொழியிலும் வார்த்தை இல்லை. எனினும் அவர்களுக்கு இறைவன் மன உறுதியையும், இந்த பெரும் துயரில் இருந்து மீள்வதற்கு தேவையான சக்தியையும் தர வேண்டும். தமிழரின் வாழ்வை வளப்படுத்த உழைத்த ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஜி.கே.வாசன்:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. அவரின் இழப்பு அவர் சார்ந்த இயக்கத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் ஏன் இந்தியாவுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

ஜவாஹிருல்லா:–

கோடிக்கணக்கான தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற ஜெயலலிதாவின் மறைவு ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு இறைவன் பொறுமையை அளிக்க பிரார்த்திக்கிறேன்.

காதர் மொய்தீன்:–

நிலையில்லா இந்த உலக வாழ்க்கையில் தன் புகழை நிலையாக நிற்கும் அளவுக்கு சாதனை புரிந்து மறைந்தவர் வரிசையில் ஜெயலலிதாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சரித்திரத்துக்குள் வந்தார். இன்று முதல் அவர் ஒரு சரித்திரமாகிவிட்டார். அவரின் ஆன்ம சாந்திக்கு இறையருள் துணை நிற்குமாக.

ராம கோபாலன்:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர், நிர்வாக திறமை உடையவர், மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர், மக்களின் நலன்களுக்காக பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்தவர்.

தேசிய சிந்தனையும், தெய்வீக நம்பிக்கையும் கொண்ட ஜெயலலிதா, தனது சீரிய செயல்பாட்டால் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவிலும் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் என்று இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசிய நாட்டு, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவானது, தமிழக மக்களுக்கு மட்டுமன்றி, உலகத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு என்றே கூற வேண்டும். சரித்திரம் என்றும் ஜெயலலிதாவை மறக்காது. என்பது திண்ணம். இவ்வேளையில், தமிழக முதல்–அமைச்சரை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் சார்பாகவும், மலேசிய தமிழர்கள் சார்பாகவும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்து கொள்கிறேன். ஜெயலலிதாவின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பால் தினகரன்:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு குடும்பமாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கும், இனி ஆட்சி செய்யப் போகிறவர்களுக்கும் இறைவன் சமாதானத்தையும், ஆறுதலையும் அருளிச் செய்வார்.

உத்ரகாண்ட் மாநில எம்.பி.

இது தவிர ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, உத்ரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய், தமிழக முன்னாள் கவர்னர் பி.எஸ்.ராமமோகன ராவ், த.மா.கா. மூத்த துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், புதிய நீதிக்கட்சி நிறுவனர்–தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கழக நிறுவன–தலைவர் ஏ.நாராயணன், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ், கோகுல மக்கள் கட்சி நிறுவனர்–தலைவர் எம்.வி.சேகர்;

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.காஜா மொய்தீன், இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத், மாநில தலைவர் தெகலான் பாகவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில்;

ஆர்.எஸ்.எஸ்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், மத சார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச் செயலாளர் கரு பவுனாச்சாரி, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் க.சக்திவேல் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் எம்.எல்.ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, இனிய உதயம் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.கோமளா ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.