முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ; பிரதாப் சி ரெட்டி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் ;  பிரதாப் சி ரெட்டி தகவல்

வெள்ளி, நவம்பர் 25,2016,

சென்னை, முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இயல்புநிலைக்கு திரும்ப பயிற்சி எடுத்து வருகிறார் என்றும்,’ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா 90 சதவீதம் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”முதல்வர் நலமாக இருக்கிறார். அதனால் தான் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். மனவலிமை மிக்க முதல்வர் விரைவாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் 90 சதவீதம் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். தேவையான நேரத்தில் மட்டும் தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிராகியோஸ்டமி டியூப் மூலமாக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த டியூப் நிரந்தரமாக பொருத்தப்படவில்லை. தற்காலிகமானது மட்டுமே.

அதனால் அவருக்கு பேச்சு பயிற்சி தேவையில்லை. உதவியாளர் உதவியுடன் சிறிது நேரம் பேசுகிறார். பேசுவதற்கு வசதியாக சிறிய அளவிலான மைக்கும், அந்த அறையில் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது. தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தொடர்ந்து அளித்த தீவிர சிகிச்சைக்கு பலன் கிடைத்துள்ளது. முதல்வர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வீட்டுக்கு செல்லலாம்” என்று டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.