முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார்,90 சதவீதம் தாமாகவே சுவாசிக்கிறார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

சனி, நவம்பர் 26,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். அவர் 90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் உறுப்புகள்தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அவர் கூறியதாவது;

அப்பல்லோ மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு சிறப்பான சிகிச்சையை அளித்துள்ளனர். 6, 7 வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட அதே சிகிச்சையே அவருக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது. மருத்துவமனையைச் சேர்ந்த இருதயவியல், சிறுநீரகவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்டத் துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து முடிவெடுத்ததன் அடிப்படையில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்பு முதல்வர் கூடுதல் மகிழ்வுடன் உணரக்கூடும்.
மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் சிலர் 2 வாரங்கள் கூட வீட்டுக்குச் செல்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது முதல்வரின் அனைத்து உடல் உறுப்புகளும் சீராக இயங்குகின்றன.
முதல்வர் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதே மீதம் உள்ளது. சாதாரணமாக ஒருவர் 12 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கினாலே, அடுத்த நாள் உடல் இயக்கத்துக்கு உடற்பயிற்சி தேவைப்படும். தீவிர உடல்நலக் குறைவால் முதல்வர் பல வாரங்கள் படுக்கையில் இருந்துள்ளார்.
எனவே, அவரது ஒட்டுமொத்த உடலுக்கும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான இயன்முறை சிகிச்சையை நிபுணர்கள் கையாள்கின்றனர். முதல்வர் தாமாகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இயன்முறை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர்.
அடுத்தகட்டமாக, முதல்வர் எழுந்து நின்று, நடக்க வேண்டும். அதன் பின்பு அவர் வீடு செல்வதற்கு தயாராகிவிடுவார்.
முதல்வர் ஜெயலலிதா மிகவும் மன வலிமை மிக்கவர். எனவே, வீடு திரும்புவதை அவரே உங்களுக்கு அறிவிப்பார்.
90 சதவீதம் சுவாசிக்கிறார்: சுவாசத்தைச் சீராக்குவதற்காக அறுவைச் சிகிச்சை (டிரக்யாஸ்டமி) செய்யப்பட்டு கழுத்தில் பொருத்தப்பட்ட குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அந்த குழாயினால் அவர் அசௌகரியமாக உணரவில்லை. தற்போது முதல்வர் தாமாகவே 90 சதவீதம் சுவாசிக்கிறார்.
கழுத்தில் பொருத்தப்படும் குழாயின் காரணமாக நோயாளிகளால் பேசமுடியாது. எனவே, அந்தக் குழாயில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் பேசி வருகிறார். மூச்சைப் பிடித்துக் கொண்டு பேச வேண்டும் என்பதால், குழாயில் உள்ள ஒலிபெருக்கியைக் கொண்டு பேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. முதல்வர் தற்போது சில நொடிகள், சில நிமிஷங்கள் மட்டுமே பேசுகிறார்.
சில நோயாளிகளுக்கு கழுத்தில் நிரந்தரமாக குழாய் பொருத்தப்படும்போது, அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பேசுவதற்காகப் பயிற்சி அளிப்போம். ஆனால் முதல்வருக்கு அது தாற்காலிகமாகவே பொருத்தப்பட்டுள்ளது.எனவே, அவர் பூரண நலத்துடன் உள்ளார். வீடு திரும்புவது குறித்து முதல்வரே தீர்மானிப்பார்.இவ்வாறு அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.