முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதா வின் முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை

சனி, மார்ச் 12,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே அதிக வனப்பரப்புக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் வனப்பகுதி 2 ஆயிரத்து 501 சதுர கிலோ மீட்டர் அதிகரித்து, தற்போது 26 ஆயிரத்து 345 சதுர கிலோமீட்டராக உள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்தந்த ஆண்டுகளில் அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தின் வனப்பகுதி அளவு குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவிலேயே அதிக வனப்பகுதியைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் பூகோள ரீதியிலான பரப்பளவான ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டரில், கடந்த ஆண்டு நிலவரப்படி 26 ஆயிரத்து 345 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவானது 2013-ம் ஆண்டில் இருந்த வனப்பகுதியைக் காட்டிலும், 2 ஆயிரத்து 501 சதுர கிலோமீட்டர் அதிகம் என நாடாளுமன்றத்தில் தாக்கலான அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, தமிழகத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 9 புள்ளி 5 சதவீதம் வனப்பகுதி ஆகும்.