முதல்வரை ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ; உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பேட்டி

முதல்வரை ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ; உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பேட்டி

சனி, அக்டோபர் 22,2016,

சென்னை ; சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய வித்யாசாகர் ராவ்  இன்று 2-ஆவது முறையாக மருத்துவமனைக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசினார்.முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, கவர்னர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆளுநருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
அப்போது, தீவிர சிகிச்சைக் குழுவில் உள்ள நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்துவருவதாக பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
முதல்வரின் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடு குறித்தும், சுவாசத்துக்கு ஆதரவு அளிக்கும் சிகிச்சை, இயன்முறை மருத்துவம் (பாஸிவ் ஃபிஸியோதெரபி) ஆகியன தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார்.
சிகிச்சைகளுக்கு முதல்வர் சிறப்பான ஒத்துழைப்பைத் தருவதுடன், அவர் உரையாடியும் வருகிறார்.
முதல்வர் சிகிச்சை பெறும் அறைக்கு ஆளுநர் நேரில் சென்று பார்த்தார். அப்போது, முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி அடைந்தார்.
சிறந்த பராமரிப்பை வழங்கி சிகிச்சை அளித்து வருவதற்காக மருத்துவ நிபுணர்கள் குழுவுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.