முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

வியாழன் , நவம்பர் 24,2016,

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைத்திட, முதல்வர் அறிவித்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு விட்டுள்ளார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், ”விவசாயிகள் நலன் கருதி கடந்த மார்ச் மாதம் வரை கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் இருந்த ரூ.5 ஆயிரத்து 780 கோடியே 92 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தள்ளுபடி சான்றிதழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்க்கடன் வழங்கப்படும்.

நடப்பாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 22-ம் தேதி வரை 3 லட்சத்து 59 ஆயிரத்து 778 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 161 கோடியே 99 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 44 ஆயிரத்து 349 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.222 கோடியே 90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 9-ம் தேதி முதல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதது என அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வங்கி வரண்முறைக்குள் வரவில்லை. இதனால், செல்லாத நோட்டுக்களையும் சங்கங்கள் பெற முடியவில்லை. பயிர்க்கடனையும் வழங்க முடியவில்லை. மேலும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மத்திய கூட்டுறவு வங்கியிலும், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெற முடியவில்லை.

இதையடுத்து, 22-ம் தேதி விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அத்திட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, உழவு இயந்திரங்கள் வாடகை, பயிர்க்காப்பீட்டுத் தொகை ஆகியவை பயிர்க்கடன் தொகையில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று செல்லூர் கே.ராஜு பேசினார்.