முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முதலுதவி மோட்டார் சைக்கிள் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட முதலுதவி மோட்டார் சைக்கிள் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

செவ்வாய், பெப்ரவரி 16,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலுதவி மோட்டார்சைக்கிளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 10 வாகனங்களின் மூலம் 101 பேருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் எளிதில் செல்வதற்காகவும், விரைந்து முதலுதவி அளிப்பதற்கு ஏதுவாகவும் மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனமே இந்தச் சேவையையும் அளிக்கிறது.
இவற்றில் 31 வாகனங்கள் ஆண்கள் இயக்கும் மோட்டார்சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் பெண்கள் இயக்கும் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்களின் மூலம் முதலுதவி அளிக்கும் திட்டம் ஏற்கெனவே கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. சில தனியார் மருத்துவமனைகளின் மூலம் ஒன்றிரண்டு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், இலவச மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், அதிக அளவில் மோட்டார்சைக்கிள் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
நவீன கருவிகள்: மோட்டார்சைக்கிள் வாகனங்களின் பின்புறத்தில் ஒரு பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். அதனுள் கையடக்க பிராணவாயு உருளை, ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் கருவி, உடல் வெப்பத்தை அறியும் கருவி உள்ளிட்ட முதலுதவிக்குத் தேவையான அனைத்து நவீன கருவிகளும், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கத் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டிருக்கும்.
பெரிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள ஸ்டிரெச்சர் தவிர, இதர அனைத்து வசதிகளும் இதில் இடம் பெற்றிருக்கும். அதனால், அனைத்து வகையான ஆபத்துகளையும் இந்த வாகனங்களால் கையாள முடியும்.
சைரன் விளக்குகள்: மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்கள், வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில் விரைவாகச் செல்வதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ளதைப் போன்று சைரன், வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ஒளிரும் விளக்குகள், ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
அவசரகால உதவியாளர்கள்: ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருக்கும் அவசரகால உதவியாளர்களே இந்த வாகனத்தை இயக்குகின்றனர்.
விபத்து அல்லது முதலுதவி தேவைப்படும் இடத்துக்கு இவர்கள் விரைந்து சென்று தேவையான முதலுதவி அளித்து, நோயாளியை நிலைப்படுத்துவார்கள்.
அதன்பிறகு, தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்.
இதுதொடர்பாக 108 சேவை நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
சென்னையில் முதல் கட்டமாக 10 வாகனங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. பத்து வாகனங்களின் மூலம் திட்டம் தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 101 பேருக்கு முதலுதவி, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் அதிகமுள்ள இடங்களில் இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தச் சேவை அளிக்கப்படும். தேவையைப் பொருத்து, இந்த வாகனத்தின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். அதன்பிறகு, பிற நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
மக்கள் வரவேற்பு: இந்தப் புதிய சேவைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்வோர் மோட்டார் வாகனங்களை அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டுக் கூறுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இரவு 8 மணி வரையிலான இந்தச் சேவையை 24 மணி நேரமாக விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
101 பேருக்கு முதலுதவி
இந்தச் சேவை தொடங்கப்பட்ட நான்கு நாள்களில் 101 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
வாகன விபத்துகள்- 29 பேர்
பிற விபத்துகள்- 18 பேர்
சுவாசப் பிரச்னை- 14 பேர்
சுயநினைவு இழப்பு- 11 பேர்
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை- 8
வலிப்பு நோய்- 8 பேர்
மாரடைப்பு- 4
பக்கவாதம்- 4
தற்கொலை முயற்சி- 2 பேர்
தீக்காயம், காய்ச்சல், சர்க்கரை நோய்- 3
பிரத்யேக சீருடை
மோட்டார் சைக்கிளை இயக்கும் அவசரகால உதவியாளர்களுக்கென்று பிரத்யேக வண்ணத்தில் சீருடையை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாள் முழுவதும் வெயிலில் சென்றால் வியர்க்காத வகையில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் கால், கை மூட்டுகளில் அடிபடாத வகையில் உபகரணங்கள் பொருத்தப்படும் வகையில், அந்தச் சீருடை தயாரிக்கப்பட்டு வருகிறது.
சோதனை அடிப்படையில் ஒரு சிலருக்கு இந்தச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்பு முழுமை பெற்றவுடன் அனைவருக்கும் வழங்கப்படும்.
இந்த வாகனங்களை இயக்குபவர்களுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை, விபத்துக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.