முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது

வெள்ளி, அக்டோபர் 14,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக 48 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் வேண்டுமென்றே சிலர் முதல்வரின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குரல் பதிவு, போட்டோக்கள், செய்திகள் என முதல்வரின் உடல்நிலை பற்றி பேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர், யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில் சதீஷ் சர்மா என்கிற பேஸ்புக் கணக்கில் இருந்து முதல்வரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி திருச்செங்கோட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான சதீஷ்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். தமிழ் எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற இணைய தளம் மூலமாக வதந்தி பரப்பிய மதுரையை சேர்ந்த மாடசாமி என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை பற்றி முகநூலில் வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது பெயர் திருமணிச்செல்வம் (28). இன்னொருவர் பாலசுந்தரம் (42). இருவரையும் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். திருமணிச்செல்வம் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் தங்கதுரை. வங்கி ஊழியரான திருமணிச்செல்வம் தனது பேஸ்புக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்திகளை நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதனை போலீசார் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு நபரான பாலசுந்தரம் சென்னை பம்மல் எல்.ஐ.சி. காலனியில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரும் தனது பேஸ்புக் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகளை பரப்பியுள்ளார். இதன் காரணமாக பாலசுந்தரம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய குற்றத்திற்காக ஏற்கெனவே 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கூடுதலாக 9 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் மூலம் மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதி உள்ள 48 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரையும் கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.