முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை நாடே போற்றுகிறது ; அமைச்சர் கருப்பணன் பெருமிதம்

முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை நாடே போற்றுகிறது ; அமைச்சர் கருப்பணன் பெருமிதம்

ஞாயிறு, ஆகஸ்ட் 14,2016,

சென்னை;காற்றின் தன்மையை கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வகம் என்ற திட்டம் இந்திய அளவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை நாடே போற்றுகிறது என்று அமைச்சர் கருப்பணன் பெருமிதத்தோடு கூறினார்.
சட்டமன்றத்தில் 2016–-2017ம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதம் முடிவில் சட்டமன்றத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் பதிலளிக்கையில் கூறியதாவது:–

முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் காரணமாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரத்தில் காற்றின் தரம் மிகவும் மேம்பட்டுள்ளது என தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது 2.6.2016 நாளிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது தமிழர்களாகிய நாம் அனைவரும் மிகவும் மகிழத்தக்கதாகும். அதிலும் குறிப்பாக, சென்னை மாநகரம் போன்ற தொழில் வளர்ச்சியில் மேம்பட்ட நகரில் காற்றின் தரம் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களை காட்டிலும் மேம்பட்டுள்ளது என்பது முதல்வரின் அறிவுத்திறனுக்கும், செயல்திட்டத்திற்கும், செயல் ஆற்றும் திறனுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் சுற்றுச்சூழல் மாசற்ற மாநிலத்தை உருவாக்குவது இறைவனுக்குச்செய்யும் மிகப்பெரிய தொண்டு என்ற கொள்கை கொண்டவர் அனைத்து மதத்தினராலும் மதித்து பெருமைப்படுத்தப்படுபவர். அதனடிப்படையில் இந்து அறநிலையத் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இப்பணிகளுக்காக புண்ணியதலம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வீதம் 11 தலங்களுக்கு மொத்தம் ரூ.55 லட்சங்கள் இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்ப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் வாகன பிரச்சாரம் ரூ.64 லட்சம் செலவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.ஆசிய கண்டத்திலேயே தமிழகத்தில் தான் அதிக மரம்  என்னும் பெருமை முதலமைச்சரின் ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 2002-ம் ஆண்டு தேசிய பசுமைப்படை உருவாக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மாவட்டம் ஒன்றிற்கு 250 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் 8000 பள்ளிகளில் தேசிய பசுமைப்படை செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பசுமைப்படை சூழல் மன்றத்தின் செயல்பாட்டுக்கு பள்ளி ஒன்றிற்கு ரூ.2500 வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சூழல் விழிப்புணர்வு இயக்கத்தில் 3,20,000 மாணவ, மாணவியர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
மாபெரும் பசுமைப் போர்வை திட்டம் திட்டத்தின் கீழ் 2012, 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் முறையே 64 லட்சம், 65 லட்சம் 66 லட்சம் மற்றும் 67 லட்சம் மரக்கன்றுகள், முதல்வரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வனத்துறை மற்றும் பொது மக்கள் உதவியுடன் மொத்தம் 2 கோடியே 62 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு வனத்துறைக்கு இதுவரை மொத்தம் ரூ.83.662 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு தமிழகத்தின் பசுமை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த மரம் வளர்க்கும் மகத்தான திட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த மரங்கள் எல்லாம் ஓங்கி வளர்ந்து ஆசிய கண்டத்திலேயே தமிழகத்தில் தான் அதிக மரம் உள்ளது என்ற பெருமை முதல்வரையே வந்துசேரும்.இவ்வாறு அமைச்சர் கருப்பணன் பேசினார்.