முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின்படி உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் : எம்.ஜி.ஆர். இளைஞர்அணி கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் ஜெயலலிதாவின் வியூகத்தின்படி உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் : எம்.ஜி.ஆர். இளைஞர்அணி கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, ஜூலை 10,2016,

சென்னை:முதல்வர் ஜெயலலிதா வகுத்து தந்த வீயூகத்தின்படி செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை தேடித்தர பாடுபடுவோம் என்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அதன் மாவட்டச் செயலாளர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விபரம் வருமாறு.,

இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் நிகழ்த்த முடியாத, எவரும் எண்ணிப்பார்த்திராத சரித்திர சாதனையாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், வேட்பாளர்களை அறிவித்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து, மதிநுட்பத்துடன் வியூகங்கள் அமைத்து, ஊண், உறக்கம்பாராமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனி மனித ராணுவமாய், எதிரிகளின் வியூகங்களை பொடிப்பொடியாக்கி, 32 ஆண்டுகள் முறியடிக்கப்படாத சாதனைகளை முறியடித்து, 6-வது முறையாக தமிழகத்தின் தன்னிகரில்லாத முதல்வராக அரியணையில் அமர்ந்து, மாபெரும் வரலாற்று சாதனையை படைத்து, தமிழக வரலாற்றில் அ.தி.மு.கவை மாபெரும் இயக்கமாக மாற்றிக் காட்டிய தமிழகத்தின் முதலமைச்சர், ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சமர்ப்பித்து வணங்குகிறது.

வாரி-வாரி வழங்கிய எண்ணற்ற திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும், ஜாதி-மத வேறுபாடின்றி சென்று சேர்ந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதல்வர் ஜெயலலிதாவே ஆள வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் ஜெயலலிதா அமர வைத்து அழகு பார்க்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.

உலகமே வியந்து போற்றுகின்ற வகையில், நடந்த முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, தமிழக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழக முன்னேற்றத்திற்காகவும் உன்னதமான ஒரு தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு காலம் முறியடிக்கப்படாத சாதனையை முறியடித்து, வரலாற்று வெற்றியினை பெற்றதோடு நில்லாமல், மக்களுக்கு கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் நோக்கில், முதலமைச்சராக பதவியேற்றவுடன், ஏழை-எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையில்,  அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறிநெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம், தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சில்லறை விற்பனை மதுபானகடைகள் மற்றும் பார்கள் முன்பு காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை என்ற நிலையை மாற்றி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 500 கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, தாலிக்கு தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராமாக (1 பவுன்) உயர்த்தி வழங்கவும், 5. 31.3.2016 வரை சிறு-குறு விவசாயிகள் பெற்று இருந்த பயிர்கடன் நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட பயிர் கடன் ஆகிய 5780 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து, 5 முத்தான திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றியை காணிக்கையாக்குகிறது.

தமிழக இளைஞர்கள் அதிக அளவில் கல்வி கற்க வேண்டும், இளைஞர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப் படவேண்டும், அதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு, இந்திய திருநாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக, தமிழகத்தில் பள்ளிகல்வி துறையில் நிதிஒதுக்கீட்டை உலகமே வியந்து போற்றுகின்ற அளவில், 85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேலும் கடந்த 5 ஆண்டுகளில் உயர் கல்விதுறையில் கல்வி கற்க சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை 44 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தை இந்திய அளவில், கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டிய தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி வணங்குகிறது.

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதற்கான வியூகங்களையும், உத்திகளையும், அ.தி.மு.கவினர் ஆற்றவேண்டிய பணிகளையும் முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுக்க இருக்கின்றார்கள். முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, களப்பணிகளை மேற்கொண்டு அ.தி.மு.க வேட்பாளர்களின் 100 சதவீத வெற்றியினை முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் வரை அயராது உழைப்போம் என எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒரு மனதாக சபதம் ஏற்கிறது.

அ.தி.மு.க தலைமைப் பொறுப்பேற்ற காலம் முதல், தன்னுடைய தியாகத்தாலும், உழைப்பாலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வண்ணம் அரும் பணியாற்றி வருகின்றார்கள். 17 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கமாக இருந்த அ.தி.மு.கவை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா, அவரது தியாக தலைமையை ஏற்றுக் கொண்டு விசுவாசத்தோடு முதல்வர் ஜெயலலிதா வழி நடக்க ஆர்வமுடன் காத்திருக்கும் அனைத்து இளைஞர்களையும், ஒருங்கிணைத்து கழகத்தின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கும் பணியினை மேற்கொள்வது என்றும், முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு செய்த பணிகளை வீடு வீடாக எடுத்து சென்று, திண்ணை பிரச்சாரம் செய்து, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீத வெற்றி பெற, களப்பணியாற்றி வெற்றி கனியை முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் இணை செயலாளர்கள் முகில் சதன் பிரபாகர், செவ்வை சம்பத் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அப்பு தீபக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம.ராசு வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் விஜியலா சத்தியானந்த், எம்.பி., அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தகவல் தொழில்நுட்பத் பிரிவுச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முடிவில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் குணசேகரன், எம்.எல்.ஏ அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.