முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

திங்கள் , டிசம்பர் 05,2016,

சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் சிகிச்சை அளித்தனர். முதல்வரின் உடல் நிலை குறித்த செய்தி கேள்வி பட்டதும் பொது மக்களும் தொண்டர்களும் அப்பல்லோ முன்பு கவலையுடன் திரண்டனர் . முதல்வர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ,  பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை செய்தனர். பொது மக்களும் முதல்வருக்காக பிரார்த்தனை செய்தனர்.
 
 தமிழக முதல்வர்  ஜெயலலிதா காய்ச்சல்  மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த  செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் அக சுரப்பியல், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், இதய சிகிச்சை நிபுணர்,  சுவாச சிகிச்சை நிபுணர்,தீவிரசிகிச்சை மருத்துவ நிபுணர் ஆகியோரைக் கொண்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. அந்த குழுவினரின் தீவிர கண்காணிப்பில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள சர்வ தேச மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பியாலே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் நடத்திய ஆலோசனைப்படி தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

 முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில் அவர்  தீவிரசிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிசியோ தெரபி சிகிச் சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை  ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவருக்கு இதய மருத்துவ நிபுணரும், சுவாசவியல் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்கிறார்கள் .

மேலும் முதல்வருக்கு இதய துடிப்பை சீராக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.முதல்வரின் உடல் நிலை குறித்து மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து அவர் தனி விமானம் மூலம், உடனடியாக சென்னை புறப்பட்டு இரவு 10.50 மணி யளவில் வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு அவர் அப்பல்லோ மருத்துவமனை சென்றார்.  முதல்வரை சந்தித்துவிட்டு அவர் 15 நிமிடம் அங்கிருந்து விட்டு ஆளுநர்  மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேற வேண்டும் என்பதற்காக , ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,மத்திய அமைச்சர்கள்  வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீதாராமன்,  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரார்த்தனை நடத்தினார்கள்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் முதல்வர்  ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்தார். முதல்வரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் ராஜ் நாத்  சிங், ஜே.பி. நட்டா ஆகியோர் கேட்டறிந்தனர். இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில்  அ.தி.மு.க .தொண்டர்களும் , பொது மக்களும் திரளாக குவிந்தனர். அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பாக மக்கள் குவிந்ததால் , போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு முழுவதும் தொண்டர்கள் கவலையுடன் மருத்துவமனையிலேயே நின்று  பிரார்த்தனை செய்தபடி உள்ளார்கள்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.