முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு

செவ்வாய், ஜூன் 07,2016,

சென்னை:முதல்வர் ஜெயலலிதா வருகையை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி விழாக்கோலம் பூண்டது.  தொகுதிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி எழுச்சி மிகுந்த வரவேற்பளித்தனர்.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா தனக்கு மகத்தான வெற்றி தேடி தந்த ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றி கூறுவதற்காக  போயஸ்கார்டனில் இருந்து நேற்று மாலை 5-30 மணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழியெங்கு்ம் ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். போயஸ்கார்டனில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கடற்கரை காமராஜர் சாலை வழியாக அவர் பாரிமுனை வந்தபோது மக்கள் வெள்ளமென திரண்டு நின்று வரவேற்றனர். ராயபுரம் மேம்பாலம் அருகே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ராயபுரம் பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பழனி. மற்றும் அ.தி.மு.க வட்டசெயலாளர்கள் பொதுமக்களுடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

சென்னை ஆர்.கே.நகர், சூரியநாராயணத்தெரு காசிமேடு பெட்ரோல் அருகே வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னங்களுடன்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினரும், பெண்களும் மலர்களை தூவி முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.  முதல்வர் ஜெயலலிதா புன்னகையுடன் இரட்டை விரலை அசைத்து காட்டி மகளிரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

நன்றி கூற வந்த முதல்வருக்கு, மக்கள் வழியெங்கும் வெள்ளமென திரண்டு நின்று வரவேற்பளித்தனர். மலர்மாரி தூவினர். பூர்ணகும்பங்களுடன் மகளிர் வரவேற்றனர். சென்டை மேளம், நாதஸ்வர மேளம் மற்றும் பேண்டு வாத்தியங்களுடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் மக்கள் எழுச்சி மிகுந்த வரவேற்பளித்தனர். அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம். திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.  உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர்,  தங்கமணி, கே.சி. வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா  மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தி.நகர், சத்யா, விருகை ரவி, வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து,  முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சைதை செந்தமிழன், கே.எஸ்.சீனிவாசன், குப்பன் ஆகியோர் வழியெங்கும் மக்களுடன் சேர்ந்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர். முதல்வர் ஜெயலலிதா வருகையை தொடர்ந்து ஆர்.கே. நகர் மட்டுமில்லாமல் வடசென்னை மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க கொடிகளும் தோரணங்களும் காணப்பட்டன.

இதைத்தொடர்ந்து தண்டையார்ப்பேட்டை வீரராகவன் தெரு, கிராஸ் ரோடு, ஏ.இ.கோயில் தெரு, சேணியம்மன் கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு வ.உ.சி.நகர், வ.உசி.நகர் மார்க்கெட் தெரு. இளையமுதலி தெரு,  திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் பாலம், வைத்தியநாதன் பாலம் -எண்ணூர் நெடுஞ்சாலை, வைத்தியநாதன் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்த முதல்வர், சிமெட்ரி ரோடு அருகே நேற்று இரவு 7-25 மணிக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை நிறைவு செய்தார்.