முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

சனி, நவம்பர் 12,2016,

சென்னை ; இயல்பாக மூச்சு விடுவதால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். தற்போது, ஜூடி என்ற பிசியோதெரபி நிபுணர் மட்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார். 
நேற்று 51-வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் இல்லாமலேயே, தொடர்ந்து 14½ மணி நேரம் இயல்பாக சுவாசித்தார்.
நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். நீண்ட நேரம் நாற்காலியிலும் அமர்ந்திருந்தார். எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா வெகு விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.