முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திங்கள் , அக்டோபர் 03,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல் நிலை நன்றாக குணமடைந்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பியாலே சென்னை வந்து, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி முதல்வருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குணமடைந்து வரும் முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து இழப்பு காரணமாக சென்னை அப்பல்லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரிரு நாளிலேயே வழக்கமான உணவுகளை சாப்பிட்டு வருகிறார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.1) அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் சிகிச்சை பெறும் வார்டிற்கு நேரில் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என கவர்னர் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் சந்தித்தது குறித்து கவர்னர் மாளிகை நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. அதில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள்  பற்றி அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கவர்னரிடம் விளக்கி கூறினார்.

முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதையும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அப்போது தெரிவித்தனர். முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கவர்னர் குறிப்பிட்டார். முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதை கவர்னர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முதல்வரை நல்ல முறையில் கவனித்து மிக உயரியமுறை மருத்துவ சிகிச்சையை அளிக்கும்  மருத்துவர்களையும் கவர்னர் அப்போது பாராட்டினார்.

தமிழக முதல்வரை சந்தித்த கவர்னர், அவருக்கு கூடை நிறைய பழங்கள் அளித்து முதல்வர் வேகமாக குணமடைய வாழ்த்து தெரிவித்தார். தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கவர்னரின் முதன்மைச்செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நல்ல குணமடைந்து வருவது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை  நேற்று இரவு (ஞாயிறு) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா  உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த கருத்து பெறுவதற்காக சர்வதேச மருத்துவ நிபுணரும், மூத்த மருத்துவ நிபுணருமான டாக்டர்  ரிச்சர்ட் பியாலே 30-9-2016 அன்று லண்டனில் இருந்து சென்னை வந்தார்.

அவர் லண்டனில் உள்ள ”கய்ஸ் அண்ட்  செயின்ட் தாமஸ்” மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் ஆவார். அவரிடம் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. டாக்டர் ரிச்சர்ட்  முதல்வரின்  பல்வேறு மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து  பின்னர் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவக்குழுவுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தற்போதைய மருத்துவ சிகிச்சை முறை  மேற்கொள்ளப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும்  டாக்டர் ரிச்சர்ட் பியாலே ஆகியோர் நடத்திய விரிவான ஆலோசனைக்கு பின்னர் தொற்றை சரி செய்வதற்கான தற்போதைய  சிகிச்சை திட்டம் மற்றும் உரிய ஆண்ட்டி பயாடிக் மருந்துகள் அதனைச்சார்ந்த மருத்துவ நடைமுறைகள் முதல்வருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவர்  நல்ல முறையில் குணமடைந்து வருகிறார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனையின்  தலைமை செயல் அதிகாரி  சுப்பையா விஸ்வநாதன் நேற்று இரவு வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.