முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன் மகா யாகம்

முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன்  மகா யாகம்

ஞாயிறு, அக்டோபர் 23,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி 108 வகை மூலிகைகள் மற்றும் நவதானியங்களுடன் மகா வேள்வியும் யாகமும் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சிறப்பு வேள்வி-யாகம் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக அங்கு சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நடுவில் யாக குண்டங்கள் அமைத்து ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டன. 30 சிவாச்சாரியார்கள் இதில் கலந்து கொண்டு 9 நவதானியங்கள் 108 வகை மூலிகைகளை வேள்வியில் இட்டு வேத மந்திரங்கள் ஓதினர்.முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனைகள் செய்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செந்தமிழன், விஜிலா சத்தியானந்த் எம்.பி, நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமச்சந்திரன், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், ஏவி.எம்.பாலசுப்பிரமணியம், ராம்குமார், ஆர்.பி. சவுத்ரி, பிரமிட் நடராஜன், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கங்காராஜ், முன்னாள் தலைவர் சி.கல்யாண், காட்ரகட்ட பிரசாத், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, ‘கில்டு’ தலைவர் ஜாகுவார் தங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.