முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும் : பிரசாரம் தொடங்கிய .சரத்குமார் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும் : பிரசாரம் தொடங்கிய .சரத்குமார் பேட்டி

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

“தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும்“ என்று திருச்செந்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார். இதையொட்டி திருச்செந்தூரில் சன்னதி தெருவில் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ஆர்.சரத்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை உறுதிபட கூறுகிறேன். திறமையான, மக்கள் நலனுக்காக செயல்படும் முதலமைச்சரை பெற்று உள்ளோம். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேட்பாளராக என்னை அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கனியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. திருச்செந்தூரில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்ட உடன் பிரசாரம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தென்காசியில் என்ன செய்து இருக்கிறார், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்று சிலர் கூறினார்கள். ஜெயலலிதா என்னை எங்கு பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கு போட்டியிடுகிறேன். அந்த எண்ணத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

தென்காசிக்கு சென்று பார்த்தால், என்ன செய்து இருக்கிறேன் என்று அங்கு உள்ள மக்கள் எடுத்துக் கூறுவார்கள். காலையில் திருச்செந்தூர் முருகனை தரிசித்தேன். அதன் பின்பு மக்களை சந்தித்த போது, “அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க போகிறோம். நீங்கள் வெற்றி வேட்பாளராக வரப்போகிறீர்கள்“ என்று என்னிடம் கூறினார்கள். அது மிகவும் உணர்ச்சிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. உங்களின் சேவகனாக, பணியாளனாக பணியாற்றுவேன்.
நான் வானத்தில் இருந்து குதித்த நட்சத்திரம் என்று நினைத்து விடாதீர்கள். சாதாரணமாக வளர்ந்தவன். வாழ்க்கையை உணர்ந்தவன். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளை களைய வேண்டும் என்று நினைப்பவன். அதனால்தான் சமத்துவம், சமதர்மம் படைத்து வருகிறது சமத்துவ மக்கள் கட்சி. உங்களோடு நான், உங்கள் வீட்டு பிள்ளையாக தொகுதியில் பணியாற்றுவேன். மீண்டும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சிறந்த ஆட்சி அமையும்.

தேர்தல் பிரசாரம் குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். திருச்செந்தூர் தொகுதியில் உள்ள பிரச்சினையை கேட்டு வருகிறேன். இதற்காக ஒரு சர்வே நடத்தி வருகிறேன். 2 நாட்களில் அந்த சர்வே வந்து விடும். ஆத்தூர் பகுதியில் வரும் போது சாலைகள் சேதம் அடைந்து இருந்தது. அதே போன்று கோவில் பகுதியில் உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு தேவை என்ன, செய்யாமல் விட்டு இருப்பது என்ன என்பதை அறிந்து செய்வோம். தேர்தல் பிரசாரத்துக்கு தேதி குறிப்பிட்டு, எங்கு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா குறிப்பிடுகிறாரோ அங்கு செல்வேன். பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்தேன். ‘நாற்பதும் நமதே‘ என்று பிரசாரம் செய்தோம். தற்போது ‘234-ம் நமதே‘ என்று பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு ஆர்.சரத்குமார் கூறினார்.

சாமி தரிசனம்

முன்னதாக நேற்று அதிகாலையில் அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். காலை 5½ மணிக்கு விசுவரூப தீபாராதனையில் பங்கேற்றார். தொடர்ந்து சுவாமி சூரசம்கார மூர்த்தி முன்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் கலந்துகொண்டார். பகல் 11 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அந்த தெருவில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்த மக்களை நேரில் சந்தித்து, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். திருச்செந்தூர் கீழதரவீதியில், திருச்செந்தூர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில் கோவில் பிரசாதம், வேல் வழங்கப்பட்டது. கீழரதவீதி-சபாபதிபுரம் சந்திப்பில் உள்ள டீக்கடையில் மக்களோடு நின்று டீக்குடித்தார். ரதவீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.