முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு : மின்னணு திரை மூலம் மக்கள் காண ஏற்பாடு

ஞாயிறு, மே 22,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும்  பொதுமக்கள் பார்க்க செய்தித்துறை மின்னணு திரைவாகனங்களின் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவுடன்    28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 19ம்தேதி  நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தனித்து போட்டியிட்ட அதிமுக இதுவரை இல்லாதவகையில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நாளை மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  எளியமுறையில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக சென்னை  பல்கலைக்கழகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக சார்பில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவின் வடசென்னை, தென் சென்னை மாவட்ட கழகங்கள் சார்பில் இந்த வரவேற்பில் அதிமுக தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. .

இதற்கிடையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் காணும் வகையில் செய்தித்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் நவீனமின்னணு திரைவாகனம் மூலம்  மாநிலத்தின் மற்ற இடங்களில் மக்கள் அதிகம்கூடுகின்ற இடங்களில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்ச்சிமுதல்முறையாக செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நேரடியாக ஒளிப்பரப்பிடஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரவக்குறிச்சி தொகுதி அடங்கிய கரூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் தொகுதி அடங்கிய தஞ்சை மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு திரை மூலம் முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.