முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

சனி, அக்டோபர் 15,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் கோவில்களில் நெய் தீபம் ஏற்றி மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்களில் இன்று காலை 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை, ஒரே நேரத்தில் சிறப்பு தீப வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் கோடானகோடி பொதுமக்கள், கோயில்களில்  நெய் தீபங்கள் ஏற்றி, முதல்வர் விரைவில் பூரண நலம்பெற வேண்டி, மனமுருக பிரார்த்தனை நடத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, நேதாஜி நகர் முருகன் கோயிலில், அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். தென்சென்னை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சைதாப்பேட்டை அருள்மிகு கடும்பாதி அம்மன் திருக்கோயிலில் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் விளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், ராயப்பேட்டை அருள்மிகு மஞ்சள் மாரியம்மன் திருக்கோயிலில் நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்கள் தீப வழிபாடு மேற்கொண்டனர்.  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் மற்றும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், வயலூர் முருகன் கோயில், வெக்காளியம்மன் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் பொதுமக்களுடன் கழக தொண்டர்களும் தீபமேற்றி, முதலமைச்சருக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்ஆலயம், துறையூர் பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களில் பொதுமக்கள் ஒரேநேரத்தில் தீபவழிபாட்டில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் வினாயகர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாந்தோப்பில் உள்ள ஊரடி மாரியம்மன், காளியம்மன், உத்தம பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு அகல் விளக்கேற்றியும் பொதுமக்கள் வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், சிம்மக்கல் ஆஞ்சநேயர் கோவில், சிம்மக்கல் சொக்கநாதர் கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில், அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், பைரவர் கோவில், பேச்சியம்மன் கோவில், திண்டுக்கல் ரோடு முருகன் கோவில், எஸ்.எஸ். காலனி விநாயகர் கோவில், எல்லீஸ்நகர் கருமாரியம்மன் கோவில், வில்லாபுரம் விநாயகர் கோவில் உட்பட மதுரை மாநகரில் 76 வட்டங்களில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களில் இன்று காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை 3 லட்சம் விளக்கில் தீபம் ஏற்றி முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல்நலம் பெற்று நூற்றாண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று மாபெரும் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமறை குளத்தில் உள்ள ஆதிலிங்க சுவாமி சன்னதியில் தீபவிளக்கேற்றி வைத்து  தீப வழிபாட்டை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் மனைவி ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஒத்தக்கடை யோக நரசிங்கம் பெருமாள் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், சோழவந்தான் மாரியம்மன் கோவில், அழகர் கோவில், திருமங்கலம் மீனாட்சியம்மன் கோவில், அத்திப்பட்டி மாரியம்மன் கோவில், மேலூர் மாரியம்மன் கோவில், சிவன் கோவில், ஏழை காத்தம்மன் கோவில், திருமோங்கூர் சக்கரத்தாழ்வார் கோவில், குருவித்துறை குருபகவான் கோவில் உட்பட மதுரை புறநகருக்கு உட்பட்ட 2026 கிளை கழகங்களிலும், 24 மாமன்ற வார்டு பகுதிகளும், 132 பேரூராட்சி வார்டு பகுதிகளும், 79 நகராட்சி வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களில் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை 10 லட்சம் விளக்கில் தீபம் ஏற்றி முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல்நலம் பெற்று நூற்றாண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று  தீபவிளக்கேற்றி மாபெரும் பிரார்த்தனை நிகழ்ச்சி  நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்ற தீப விளக்கு ஏற்றும் வழிபாட்டில்  மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை பறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று வழிபாட்டை துவக்கி வைத்தனர்.

மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள யோக நரசிங்க பெருமாள் கோவிலில் புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கோ பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேலான பசுக்கள் கன்றுகளுடன் வரவழைக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. நரசிங்க பெருமாள் கோவில் பட்டர்கள் கோ பூஜையை நடத்தினர். மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் தலைமையிலும், புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கோ பூஜையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.