முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பாதயாத்திரையாக தர்மபுரியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள்

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பாதயாத்திரையாக தர்மபுரியில் இருந்து  அப்பல்லோ மருத்துவமனை வந்த அ.தி.மு.க தொண்டர்கள்

செவ்வாய், நவம்பர் 29,2016,

சென்னை ; முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள் தர்மபுரியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு பாதயாத்திரையாக வந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினரின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
இதன்மூலம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடக்க பயிற்சி எடுப்பதற்காகவே அவர் சிகிச்சை பெற்றுவரும் அறையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
முலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். நேற்று யோகதான தர்ம நட்சத்திர பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டி தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தை (மின்சாரத்துறை) சேர்ந்த அ.தி.மு.க தொண்டர்கள் 20 பேர் பாதயாத்திரையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் கூறும்போது, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து, முழு உத்வேகத்துடன் தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் தர்மபுரியில் இருந்து பாதயாத்திரையாக வந்து இருக்கிறோம். வழியில் 1,008 கோவில்களில் அவரது பெயரில் பூஜை செய்து, பிரசாதங்களை கொண்டுவந்து இருக்கிறோம்” என்றனர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.