முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன் ; இல.கணேசன்

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன் ; இல.கணேசன்

புதன்கிழமை , நவம்பர் 09, 2016,

சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்தத் தலைவருமான இல.கணேசன் இன்று  அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் ராஜ்ய சபா எம்.பி.யான பிறகு தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டேன். அதில், முதலாவதாக என் நினைவில் தோன்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா தான். ஆனால், துர்திஷ்டவசமாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் கூட அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த எங்கள் கட்சி தலைவர் அமித்ஷாவுடன் நானும் வந்து விசாரித்தேன்.

இன்று நான் தனிப்பட்ட முறையில் அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க நேரில் வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டியை சந்தித்து மருத்துவ ரீதியாக பல விஷயங்களை தெரிந்து ஆறுதலான செய்தியை அறிந்து கொண்டேன். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல முறையில் பலன் அளித்திருக்கிறது. இயல்பான வாழ்க்கைக்கு அவர் திரும்பிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர் ஆஸ்பத்திரியை விட்டு இல்லம் திரும்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற நல்ல செய்தியை அவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், விரைவில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் மகிழ்ச்சிகரமானது தான். தீவிர சிகிச்சை பிரிவு என்பது தொற்றுநோய் மற்றவர்கள் மூலமாக ஏற்பட்டுவிடாமல் இருக்க பாதுகாப்பதற்காகத்தான்.முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து தலைமைச்செயலகத்தில் கோப்புகளை பார்க்கக்கூடிய அளவுக்கு நலம் பெற மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன்.இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.