முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை : வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை : வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு

திங்கள் , மே 23,2016,

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் வாகன அனுமதி மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது

பச்சை நிற அனுமதி சீட்டு

பச்சை நிற அனுமதி சீட்டு (பி-1) உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப நுழைவு வாயிலில் இறக்கி விட்டு, வாகனங்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிறுத்தலாம்.

பச்சை நிற அனுமதி சீட்டு (பி-2 மற்றும் பி-3) உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை வாலாஜா சாலை பல்கலைக்கழக முக்கிய நுழைவாயிலில் இறக்கிவிட்டு, வாகனங்களை எம்.ஆர்.டி.எஸ்., வார்டன் குடியிருப்பு மற்றும் விக்டோரியா விடுதி வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

நீல நிற அனுமதி சீட்டு

நீல நிற அனுமதி சீட்டு வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை வாலாஜா சாலை மற்றும் கெனால் சாலை சந்திப்பில் இறக்கிவிட்டு, பி-1 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் டி.என்.சி.ஏ. நுழைவுவாயில் மைதானத்திலும், பி-2 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் பட்டாபிராம் வாசலிலும், பி-3 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மாநில விருந்தினர் மாளிகை வளாகத்திலும், பி-4 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் கலைவாணர் அரங்கிலும் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

பிரவுண் நிற அனுமதி சீட்டு

பிரவுண் நிற அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் முக்கிய பிரமுகர்களை காமராஜர் சாலை மற்றும் ஆடம்ஸ் சாலை சந்திப்பில் இறக்கிவிட்டு, பி-1 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் தீவுத்திடலிலும், பி-2 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் தலைமை செயலக பொதுப்பணித்துறை மைதானம் எதிரிலும், பி-3 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் ராஜாஜி மன்ற மைதானத்திலும், பி-4 அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் எம்.எம்.சி. மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.