முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இன்னும் 7 நாள்களில் வீடு திரும்புவார் : டாக்டர் எச்.வி.ஹண்டே தகவல்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இன்னும் 7 நாள்களில் வீடு திரும்புவார் : டாக்டர் எச்.வி.ஹண்டே தகவல்

வெள்ளி, அக்டோபர் 21,2016,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா 7 -10 நாள்களுக்குள் வீடு திரும்புவார் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே கூறினார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டாக்டர் ஹண்டே வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அமெரிக்காவுக்கு மேல் சிகிச்சைக்காகச் சென்றார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தென்கொரியாவில் இருந்து இயன்முறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தென்கொரிய நிபுணர்கள் அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளித்தனர். அதையடுத்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நாடு திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து வீறு நடைபோட்டு வந்தார்.தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர் என்ற முறையில் விசாரிப்பதற்கு வந்தேன். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைச் சந்தித்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள 2 பெண் இயன்முறை நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அது நல்ல பலன் அளித்துள்ளது. முதல்வர் பூரண குணமடைந்து 7 -10 நாள்களுக்குள் வீடு திரும்புவார் என்றார் டாக்டர் எச்.வி.ஹண்டே.

மேலும், மருத்துவமனைக்கு வந்த, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியபோது, “முதல்வர் பூரண குணமடைய பாரத தாயைப் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியபோது, “முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தியை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்’ என்றார்.
தமிழக முன்னாள் ஆளுநர் பி.எஸ்.ராம் மோகன்ராவ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எர்ணாவூர் நாராயணன், இளங்கோ உள்ளிட்டோரும் நேற்று முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தனர்.