முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

புதன், செப்டம்பர் 14,2016,

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களும், பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70 ஆயிரம் பேர், தங்களது கட்சிகளை விட்டு விலகி அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொது செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கலந்துகொள்கிறார். அவரது முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேரும் அ.தி.மு.க.வில் இணைகின்றனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குவதுடன், அவர்களை வரவேற்றும் பேசுகிறார்.

மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேரும், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, காமராஜ், கருப்பண்ணன், செல்லூர் ராஜூ, வீரமணி, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், மாபா கே.பாண்டியராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மதுசூதனன், கலைராஜன், ராஜன் செல்லப்பா, அருண்மொழிதேவன், ராமலிங்கம், பாலகங்கா, கலைச்செல்வன், வேணுகோபால், ரத்தினவேல், செந்தில்நாதன், தன்சிங் ஆகியோர் தலைமையில் வந்து அ.தி.மு.க.வில் இணைகின்றனர்.