முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

திங்கள் , மார்ச் 07,2016,

அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்திருந்தவர்களிடம் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

தமிழக சட்டமன்றத்தேர்தல் வரும் மே 16 ம்தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை கடந்த 4 ம்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே அதிமுக தனது தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா பெயரில் அமைந்திருக்கும் பேரவையின் சார்பில் வாக்குசேகரிப்பு முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் விருப்பமனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 174 பேர்   மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதன் மூலமாக 28 கோடியே 40 லட்சம்  விருப்பமனு தாக்கலுக்கான கட்டணமாக வசூலானது  முதல்வர் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி 7 ஆயிரத்து 926 பேர் விருப்பமனுக்களை வழங்கியிருந்தனர். இந்தியாவிலேயே வேறு எந்த கட்சி தலைவருக்கும் இல்லாத வகையில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்தவர்களிடம் முதற்கட்டமாக நேற்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.  இது குறித்து அதிமுக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  முன்னிலையில் நேற்று தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் மே 16 ம்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்த கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல் புதுச்சேரி, மற்றும் கேரளாவிலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் தமிழகத்தில் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29-ம் தேதியாகும். மனுக்கள் பரிசீலனை மறுநாள் நடைபெறும். மே-2ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும். அதன்பிறகு போட்டியிடுவோர் பற்றிய விவரம் தெரியவரும். மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மே 19-ம் தேதி தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.