முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

சனி, செப்டம்பர் 03,2016,

சென்னை – தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் நேற்று பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. வித்யாசாகர் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தமிழகத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நேற்று  நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா விழாவில் பங்கேற்க வருகை தந்தபோது, அவருக்கு ஆளுநரின் தனிச் செயலாளர் தரமேஷ்சந்த் மீனா மலர்கொத்து அளித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து, வித்யாசாகர் ராவுக்கு, முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அதற்கடுத்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. எஸ்.கே.கவுல் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்க்கொத்து வழங்கினார். ஆளுநரின் மனைவி விநோதா ராவுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலுக்கு மலர்க்கொத்து வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்களை, முதல்வர் ஜெயலலிதா, ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.