முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார் : அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார் : அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்

திங்கள் , நவம்பர் 21,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் கோட்டைக்கு வந்து மக்கள் பணிகளை கவனிப்பார், என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நேற்று முன்தினம் சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைந்ததன் அறிகுறியாக இந்த நிகழ்வை கருதும் அதிமுகவினர், அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே அதனை கொண்டாடி மகிழ்ந்தனர், இதற்கிடையே இடைத்தேர்தல் களத்தில் இருந்து அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் வாலாஜா கணேசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர், முதல்வர் ஜெயலலிதா பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அதிமுகவினர் நேற்று இரண்டாவது நாளாக கொண்டாடி இனிப்புகள் வழங்கினார், தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதை எடுத்துக்காட்டும்வகையில் அப்போலோ முன்பு 108 தேங்காய்கள் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வைகைசெல்வன் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார். உடல்நல ஆரோக்கியம், இயற்கை சுவாசம், இயல்பான வாழ்க்கை, வழக்கமான உணவு, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் மதிநுட்பம், கருத்துகளை விரிவாக வெளிப்படுத்தும் விணை திட்பம், பத்திரிகைகளை உள்நோக்கும் விசாலமான பார்வையோடு இருக்கிறார். இதற்கெல்லாம் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் தான் காரணம்.
முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்புகின்றார். விரைவில் வீடு திரும்ப உள்ளார். உங்களைப்போல நாங்களும் அந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறோம். முதலமைச்சர் ஜெயலலிதா மிக விரைவில் வீடு திரும்பி, கோட்டையில் கோப்புகளை பார்க்கக்கூடிய நாள் தான் எங்களுடைய நன்னாள், பொன்னாள், திருநாள். அந்த நாளை தாய்த்திரு நாளாக நாங்கள் கொண்டாடி மகிழ்வோம். அந்த தாய்த்திருநாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். முதலமைச்சர் ஜெயலலிதா 100 ஆண்டு காலம் வாழ்ந்து தமிழ் உலகத்துக்கு தொண்டு ஊழியம் செய்வார்.இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.