முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவன் தனுஷுக்கு சென்னையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவன் தனுஷுக்கு சென்னையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், ஜூலை 20,2016,

சென்னை : பல ஆண்டுகளாக முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவனுக்கு சிறந்த சிகிச்சையளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்திகிரி தரப்பு, குருபட்டிகிராமத்தைச் சேர்ந்த பவளக்கொடி என்பவரின் மகன் சிறுவன் தனுஷ். முதுகுப் பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள கட்டியால் அவதிப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா சிறுவன் தனுஷுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைசெயலாளர் ஆகியோருக்கு உத்திரவிட்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சிறுவன் தனுஷை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பிறவியில் ஏற்பட்டுள்ள நோய் என்றும், இதற்கு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் சிறந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றும் தெரிவித்தனர். பவளக்கொடியின் ஏழ்மையான சூழ்நிலையை கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுவன் தனுஷுக்கு ஏற்பட்டுள்ள நோயினை குணப்படுத்துவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளார்.

சிறுவன் தனுஷ் மற்றும் அவரது தாயாரை சென்னைக்கு அழைத்து வந்து, சிறுவன் தனுஷுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் அளித்திடவும், சிகிச்சை முடியும் வரை அரசு செலவில் சிறுவன் தனுஷும், தாயார் பவளக்கொடியும் சென்னையில் பாதுகாப்பாக தங்க ஏற்பாடுகள் செய்யும்படியும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.