முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, செப்டம்பர் 04,2016,

சென்னை ; போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிர்நீத்த தமிழ்நாட்டை சேர்ந்த முப்படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் பொதுத்துறை, நிதித்துறை, சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள், ஏனைய ஓய்வுகால நன்மைகள் ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏக்கள் நேற்று விவாதித்தனர்.
பொதுத்துறை தொடர்பாக முலமைச்சர் ஜெயலலிதா சார்பில் பதிலுரையாற்றியதோடு அந்த துறைக்கான அறிவிப்புகளையும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.4,500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாகவும்; அவர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். இதன் மூலம் 4 ஆயிரத்து 870 பேர் பயனடைவர். இதற்கு ரூ.3.42 கோடி கூடுதல் செலவாகும்.
கருணைத்தொகை
போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உயிர்நீத்த, காயமுற்ற தமிழகத்தைச் சேர்ந்த முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தப்படுகிறது.
அதன்படி, உயிர்நீத்தவரின் வாரிசுதாரர்களுக்கான கருணைத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும்; மிகக் கடுமையான காயத்தால் இரண்டு கைகால்கண் இழந்தவருக்கான கருணைத்தொகை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், ஒரு கைகால்கண் இழந்தோருக்கான கருணைத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும் அதிகரிக்கப்படும்.
இதுபோலவே, எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளில் உயிர்நீத்த மற்றும் காயமுற்ற தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவ படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கும் அதே அளவில் கருணைத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண், வாரிசுகளுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். உடல் ஊனமுற்ற முன்னாள் படைவீரருக்கான கருணைத்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் மரணமடைந்தவர் மற்றும் 50 சதவீதத்துக்கு மேல் உடல் ஊனமுற்ற படைவீரர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். மேலும், திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
50 சதவீதத்துக்கும் குறைவாக உடல் ஊனமுற்ற படைவீரர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு அரசு இறுதி தேர்வுகளில் மாநில அளவிலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பில் முதலாம் இடத்தை பிடித்தவருக்கு பரிசுத்தொகை ரூ.25 ஆயிரம்; இரண்டாம் இடத்தை பிடித்தவருக்கு ரூ.20 ஆயிரமாகவும், மூன்றாம் இடத்தை பிடித்தவருக்கு ரூ.15 ஆயிரம் என உயர்த்தப்படும். நான்கு, ஐந்தாம் இடங்களைப் பிடித்தோருக்கு முறையே ரூ.10 ஆயிரமும், ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
பிளஸ்-2 வகுப்பில் முதலாம் இடத்தை பிடித்தோருக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தவருக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்தோருக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும்.இவ்வாறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.