மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

மேகதாதுவில் கர்நாடக அரசு  அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஞாயிறு, மார்ச் 19, 2017, 

சேலம் : மேகதாதுவில் அணை கட்ட ஒருகாலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், கோவை புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் இதன் அருகே கட்டப்பட்டுள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பிறகு, பீளமேடு கொடிசியா அரங்கம் சென்றார். அங்கு, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.694.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 130 புதிய கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்துவைத்தார். திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களையும், வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார். 

இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது :- மேட்டூர் அணை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தையும் தூர்வாருவதற்கான அரசு திட்ட அறிக்கை கிடைத்ததும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணைகள் தூர்வாரப்படும். கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருகாலத்திலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.