மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்மட்ட மருத்துவ சிகிச்சை

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்மட்ட மருத்துவ சிகிச்சை

ஞாயிறு, ஜூன் 26,2016,

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னையில் இருந்து சென்ற உயர்மட்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார்கள் என மருத்துவக்குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் பார்வை இழப்புத் திட்டத்தின் கீழ் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட 16 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், சேலம் தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, உயர்மட்ட மருத்துவக் குழுவினருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
 இதனிடையே மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
 பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தேசிய கண்ணொளித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 6 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கடந்த ஜூன் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையில் 23 பேர் கலந்து கொண்டனர்.
 இதில் கண்களில் ஏற்பட்ட தொற்று காரணமாக 16 பேர் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை உடனடியாக அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பேரில், சேலம், கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைகளில் அவர்கள் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதுடன் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றார்.
 பின்னர் ஆட்சியர் வா.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 16 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தவறான சிகிச்சையால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
அமைச்சர்கள் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி, டாக்டர் C. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் திரு. சம்பத், மேயர் திரு. S. சவுண்டப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செ. செம்மலை, திரு. ஜி. வெங்கடாசலம், திரு. சக்திவேல் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தனர்.