யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி பேட்டி

யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் : ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி பேட்டி

புதன்கிழமை, மார்ச் 22, 2017,

சென்னை : யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம்  அணியில் இணைந்த நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்  நிர்மலா பெரியசாமி நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.அப்போது நிர்மலா பெரியசாமிக்கு பொன்னாடை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். நிர்மலா பெரியசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நிர்மலா பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளபடியே மனநிறைவுடன் வந்திருக்கிறேன். இனி எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை என்னால் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். விசுவாசம், பண்பு, அமைதிக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறேன். ஒரு நல்ல பண்பாளரை கட்சிக்கு விசுவாசமாக உழைத்த அவரது மனதை புண்படுத்தி, துரோகி என்று தூற்றி வருகிறார்கள்.ஜெயலலிதாவால் முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அங்கம் வகித்த அவரை, ஜெயலலிதா இறந்தபிறகு துரோகி என்று பழிசொல்ல ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை கட்சி அலுவலகம் பக்கமே வரமுடியாமல் முடங்கிக்கிடந்தவர்கள் எல்லாம், இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? உண்மையான துரோகி யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தரக்குறைவாக பேசினார்கள். அப்போது, ‘அவர் நமக்கு எதிரி இல்லையே, அவரும் நமது கட்சிக்காரர் தானே…’, என்று கருத்து தெரிவித்தேன். அதற்கு சி.ஆர்.சரஸ்வதி, குண்டுகல்யாணம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மிகவும் மோசமாக பேசிவிட்டார்கள். அவர்களுக்கு நிகராக எனது நிலைக்கு கீழே சென்று பேச நான் விரும்பவில்லை. எனவே வந்துவிட்டேன்.நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தேன். அவரால் பரிவோடும், பாசத்தோடும் வளர்க்கப்பட்டு கட்சி பணியாற்றினேன். அங்குள்ள பெண் நிர்வாகிகளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை எனும் 3 சகாப்தங்கள் தான் அ.தி.மு.க.வின் ஆணிவேர்.
தற்போது அங்குள்ள 90 சதவீதம் பேர் மன புழுக்கத்தில் தான் உள்ளனர். இன்னும் நிறைய பேர் இங்கு வருவார்கள். ஆட்சியை கலைப்பது எங்கள் எண்ணம் அல்ல. ஜெயலலிதா எனும் மாபெரும் சக்தி இருந்தபோது கட்சியின் நிலைமை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.
கட்சி காப்பாற்றப்படும் என்று நம்பிக்கையோடு தான் நான் அங்கே காத்திருந்தேன். நடந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டது. நானும் உரிய விளக்கம் அளித்தேன். எந்தவித குற்ற உணர்வும் எனக்கில்லை. மனசாட்சிப்படி முடிவு எடுத்துள்ளேன். இதுதான் உண்மையான அ.தி.மு.க.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உண்மையான துரோகி யார்? என்பதை மக்கள் தெரிவிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக களம் இறங்கும் அண்ணன் மதுசூதனன் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறுவார். அதேபோல ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாறவேண்டும். சம்பந்தமே இல்லாதவர்கள் அங்கு ஆட்டம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு  நிர்மலா பெரியசாமி கூறினார்.
முன்னதாக தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தார். இவர்கள் உங்களை சந்திக்க ஆசைப்பட்டதால் அழைத்து வந்தேன் என்றார். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சினிமா நடிகர் ரஞ்சித், தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும், ஜெ.தீபா அணியில் இருந்த சிலரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.