ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல்

ராஜ்யசபை உறுப்பினர் தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல்

சனி, மே 28,2016,

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ராஜ்யசபை அ.தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேரும் நேற்று  வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ராஜ்யசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர்களாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவனீத கிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகிய 4 பேரையும் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான  ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

நேற்று  சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளரும் ராஜ்ய சபை தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் 4 வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ராஜ்ய சபையில் அ தி.மு.க. எம்.பி.க்கள் 3 பேர், தி.மு.க. எம்.பி.க்கள் 2 பேர், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் என 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது.காலியாகும் 6 ராஜ்யசபை எம்.பி. பதவிகளுக்கு அடுத்த மாதம் 11–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 4 ராஜ்யசபை எம்.பி. பதவிகள் கிடைக்கும். ஏற்கனவே தி.மு.க. சார்பில் 2 இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக 4 பேரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்கள் 4 பேரும் நேற்று  வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.6 இடங்களுக்கு 6 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். எனவே 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபையில் அ.தி.மு.க.வுக்கு இப்போது மேலும் கூடுதலாக ஒரு இடம் கிடைத்திருப்பதால் ராஜ்யசபையில் அ  தி.மு.க.வின் பலம் அதிகரித்துள்ளது.