ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி

ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி

செவ்வாய், ஜூன் 21,2016,

ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஒசூரில் கடந்த 15-ஆம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது தலைமைக் காவலர் முனுசாமி கொள்ளையர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர் தனபால் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விதி 110-இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

மேலும், முனுசாமியின் மகள் ரக்ஷனாவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள கே.திப்பேப்பள்ளியில் உள்ள தலைமைக் காவலர் முனுசாமியின் மனைவி முனிலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியது:

எனது குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். எனது மகள் ரக்ஷனாவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வருக்கு எனது குடும்பம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணீருடன் கூறினார்.

முனுசாமியின் மகள் ரக்ஷனா கூறியதாவது: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்தேன். பிளஸ் 2 தேர்வில் 1,182 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கட் -ஆப் 198.4 வைத்துள்ளேன். மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது தந்தையும் என்னை மருத்துவராக்க விரும்பினார்.

தற்போது எனது உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.