ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா – ‘பசி’ நாராயணன் குடும்பத்தினர்

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா –  ‘பசி’ நாராயணன் குடும்பத்தினர்

வியாழன் , ஆகஸ்ட் 04,2016,

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த ‘பசி’ நாராயணன். அவரது மறைவுக்குப் பிறகு குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, ‘பசி’ நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ‘பசி’ நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும், இந்த 10 லட்சம் ரூபாய் வள்ளியின் பெயரில் ‘தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்’ வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா 24.7.2016 அன்று அறிவித்தார். அதன்படி,நேற்று  ‘பசி’ நாராயணனின் மனைவி வள்ளிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து நிதியுதவியை பெற்றுக் கொண்ட வள்ளி, தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டார்.