ரூ.330 கோடியில் நலத் திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.330 கோடியில் நலத் திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதன் , மார்ச் 08,2017,

சேலம் : சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரூ.330.84 கோடியில் சுமார் 3,971 பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சேலம் வந்த முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி குப்பனூர் பைபாஸ் மற்றும் மகுடஞ்சாவடியிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காணொலிக்காட்சி மூலம் சேலம் மாவட்டத்தில், 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நாமக்கல் மாவட்டத்தில் 61 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தருமபுரி மாவட்டத்தில் 60 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 93 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் பேசினார்.

சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் 13 திட்டப் பணிகள் உள்ளிட்ட பல துறை திட்டப் பணிகளையும் சேர்த்து ரூ.115.71 கோடி மதிப்பீட்டில் 462 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டும், அடிக்கல் நாட்டியும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பசுமை வீடுகள், ஊராட்சி சேவை மையங்கள் என 1,432 பணிகளை உள்ளடக்கிய மொத்தம் 1,479 திட்டப் பணிகள் ரூ.61.25 கோடி செலவில் முடிக்கப்பெற்று, தொடங்கி வைக்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டம், அரூரில் உயர்கல்வித் துறையின் சார்பில் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியும், காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலும், பள்ளிக் கல்வி துறை சார்பில் பென்னாகரத்தின் 2 மாதிரிப் பள்ளிகளும், அரூரில் 3 புதிய பள்ளிகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான கட்டடங்களும், இதரக் கட்டடங்களும் ரூ.19.19 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டு, திறந்து வைக்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு துறைகளின் சார்பாக, தருமபுரி மாவட்டத்தில் ரூ.60.33 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 113 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன் வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, மின்சாரத் துறை, தொழில் துறை, உயர்கல்வித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக, வளர்ச்சித் துறை சார்பில் ரூ.93.55 கோடி மதிப்பீட்டில் 1,917 திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படுகின்றன.
சேலம் மண்டலத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.330.84 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட 3,971 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றார் முதலமைச்சர்  பழனிச்சாமி.