ரூ.424 கோடி மதிப்பிலான 13 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ரூ.424 கோடி மதிப்பிலான 13 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சுமார் 424 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின்நிலையங்களை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தொழிற் வளர்ச்சிக்காகவும் தொலைநோக்கு 2023 திட்டத்தை செயல்படுத்திட முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்வதை கருத்தில் கொண்டும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், மின் உற்பத்தியை பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம் – உப்பூரில் 995.16 ஏக்கர் நிலப்பரப்பில், 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் தலா 800 மெகாவாட் திறனுடைய 2 அலகுகள் கொண்ட மிக உய்ய உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

உப்பூர் அனல்மின் திட்டமானது 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 38.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் – இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.

உப்பூர் மிக உய்ய அனல்மின் திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி தொகுப்பு மற்றும் அதனைச் சார்ந்த பொதுவியல் பணிகளுடன், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளான வடிவமைத்தல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், தேர்வாய்வுக்குப்பின் செயல்படவைத்தல் ஆகிய பணிகளுக்கு 5,580 கோடி ரூபாய்க்கான ஒப்பந்த ஆணையினை பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. அதுல் சோப்தியிடம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, சென்னை – வியாசர்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் – குருபரபள்ளி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – குன்னப்பட்டு கிராமம், ஒமேகா தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் 230/110 கிலோவோல்ட்ஸ் துணை மின் நிலையங்கள்;

திருவள்ளூர் மாவட்டம் – அலமாதி, மதுரை மாவட்டம் – நாட்டார்மங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் – பாக்குடி, வேலூர் மாவட்டம் – புன்னை, கடலூர் மாவட்டம் – அடரி ஆகிய இடங்களில் 110/33 கிலோ வோல்ட்ஸ் துணை மின் நிலையங்கள்;

திருப்பூர் மாவட்டம் – தேவனூர்புதூர், ஈரோடு மாவட்டம் – வெண்டிபாளையம் ஆகிய இடங்களில் 110/22 கிலோ வோல்ட்ஸ் துணை மின் நிலையங்கள்;

திருவண்ணாமலை மாவட்டம் – அத்திமூர் மற்றும் மாம்பட்டு ஆகிய இடங்களில் 33/11 கிலோ வோல்ட்ஸ் துணை மின் நிலையங்கள்- என மொத்தம் 424 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின்நிலையங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளரும், எரிசக்தித் துறை பொறுப்பு வகிப்பருமான திரு. நா.ச. பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய் குமார், பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு.ஜி.கே. ஹெடா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.