வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வியாழன் , மார்ச் 17,

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவுரை கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, தொகுதி செயலாளர்கள் ஜான், தம்பிமனோகரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். துணை மேயர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும் போது கூறியதாவது:–

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இது புதிய தேர்தல் அல்ல. பல்வேறு தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.

தற்போது தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் மகத்தான வெற்றி பெற முடியும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். குறிப்பாக திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கீதா ஆறுமுகம், செல்வம், கண்ணப்பன், பட்டுலிங்கம், பகுதி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, டெக்ஸ்வெல் முத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் கரைப்புதூர் நடராஜன், மார்க்கெட் சக்திவேல், உஷாரவிக்குமார், யு.எஸ்.பழனிசாமி, அட்லஸ்லோகநாதன், ஷாஜகான் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.