வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

திங்கள் , டிசம்பர் 12,2016,

‘வார்தா’ புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை அருகே 440 கி.மீ தொலையில் மையம் கொண்டிருக்கிறது வார்தா புயல். இது  இன்று சென்னை அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகை துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுக்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மேலும் பாதுக்காப்பாக இருக்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வர்தா புயலை எப்படி எதிர்கொள்வது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.