வாள்வீச்சு வீராங்கனை சி.எ. பவானிதேவியை,சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

வாள்வீச்சு வீராங்கனை சி.எ. பவானிதேவியை,சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016,

விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, வாள்வீச்சு விளையாட்டில் சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளில், குறிப்பிடத்தக்க வெற்றிகள் பெற்றுவரும் சென்னையைச் சேர்ந்த செல்வி சி.எ. பவானிதேவியை, ”உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட ஆணையிட்டுள்ளார். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு தேவைக்கேற்ப நிதியுதவிகள் செய்யப்பட்டு, செல்வி சி.எ. பவானிதேவி, சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில், தமிழ்நாட்டில் பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்துதல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை உயர்த்தியது போன்ற, எண்ணற்ற திட்டங்களை தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

வாள்வீச்சு போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனை செல்வி சி.எ. பவானிதேவியை ஊக்குவிக்கும் வகையில், அவர் அமெரிக்காவிற்குச் சென்று பயிற்சிபெற ஏதுவாக, கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி மூன்று லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி பெல்ஜியத்தில் நடைபெற்ற 18-வது ஃபிளமிஷ் ஓப்பன் வாள்வீச்சுப் போட்டிகளில் மகளிர் சேபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக, அவரை பாராட்டி கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு லட்சம் ரூபாய் காசோலையை தாம் அவருக்கு வழங்கியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2011 – 2012-ம் ஆண்டில் தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட “உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித்தொகைத் திட்டம்” தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது – இத்திட்டத்தின்படி, விளையாட்டுத் திறமைகளின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லக் கூடிய, 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு தேவைக்கேற்ப நிதி உதவிகள் செய்யப்பட்டு, அவர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வெல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த “உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” ஏற்கெனவே உள்ள 5 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன், ஒரு சிறப்பினமாக, வாள்வீச்சு விளையாட்டில் பல்வேறு நிலையிலான சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பிடத்தக்க வெற்றிகள் மற்றும் சாதனைகள் புரிந்துவரும் சென்னையைச் சேர்ந்த செல்வி சி.எ.பவானிதேவியையும் சேர்த்திட தாம் ஆணையிட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அவர், மேலும் பல வெற்றிகள் பெற ஏதுவாகும் என தாம் நம்புவதாகவும், செல்வி சி.எ.பவானிதேவி சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகள் பெற தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி சி.எ. பவானிதேவியை, ”உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகை திட்டத்தில்” சேர்த்திட ஆணையிட்டு, ஆண்டொன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு நிதியுதவி அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பவானிதேவியும், அவரது பெற்றோரும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டில் தற்போது நடைபெற்று வரும், வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்றுள்ள செல்வி சி.எ. பவானிதேவி, இந்தத் தகவல் அறிந்தவுடன் வாட்ஸ்-அப் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ள இந்த மகத்தான உதவி, தங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதலமைச்சரின் தாயுள்ளத்திற்கு தங்கள் நெஞ்சம் என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்கும் என்றும் செல்வி பவானிதேவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.