விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

விதி எண் 110–ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் :திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

புதன், ஏப்ரல் 27,2016,

தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.வினர் மற்றும் கருணாநிதிக்கு பதிலளித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி வரும் கருணாநிதிக்கும், தி.மு.க-வினருக்கும் துறை தோறும் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு   நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றி 24.4.2016 அன்று எனது அறிக்கையில் மூன்று துறைகளைப் பற்றி விரிவாக தெரிவித்திருந்தேன்.

தற்போது மேலும், மூன்று துறைகளைப் பற்றிய விவரங்களை  நான் அளிக்க விரும்புகிறேன்.

1. வருவாய்த்துறை
 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 10.9.2011 முதல் மாநிலம் முழுவதும் (சென்னை தவிர) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 31.3.2016 வரை 3 ஆயிரத்து 40 கோடி ரூபாய் அளவுக்கு 37 லட்சத்து 68 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 
 சிவகங்கை மாவட்டம் – திருப்புவனம், திருவண்ணாமலை மாவட்டம்,   கலசபாக்கம், பெரம்பலூர் மாவட்டம் –  ஆலத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் –  கிணத்துகடவு, அன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் – திருப்போரூர், விழுப்புரம்  மாவட்டம் – சின்ன சேலம், ஈரோடு மாவட்டம் – அந்தியூர், நாமக்கல் மாவட்டம் – கொல்லிமலை என 9 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
 வருவாய் நிருவாக ஆணையர், நில நிருவாக ஆணையர் மற்றும் நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மொத்தம் 65 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
 அனைத்து மாணவ – மாணவியர்களுக்கும்  அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 42 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டுள்ளன.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கருத்துரு ஆய்வில் உள்ளது.  தற்போது தற்காலிகமாக சென்னை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 தமிழ்நாட்டில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மகசூல் இழப்பு ஏற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 58,719 பண்ணைக் குட்டைகள்  அமைக்கப்பட்டுள்ளன.  145 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்கப்பட்டுள்ளது.
 சென்னை மாவட்டம் – புரசைவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, வேளச்சேரி மற்றும் கிண்டி, திருவள்ளூர் மாவட்டம்-  திருவொற்றியூர் மற்றும் மதுரவாயல், திருப்பூர் மாவட்டம் –  திருப்பூர்(தெற்கு) மற்றும் ஊத்துக்குளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் –  திருச்சிராப்பள்ளி  (கிழக்கு) மற்றும் மருங்காபுரி, மதுரை மாவட்டம் – திருப்பரங்குன்றம், மதுரை (மேற்கு) மற்றும் மதுரை (கிழக்கு), கோயம்புத்தூர் மாவட்டம் – பேரூர் மற்றும் மதுக்கரை, சேலம் மாவட்டம் – சேலம் (மேற்கு) மற்றும் சேலம் (தெற்கு), வேலூர் மாவட்டம் – அணைக்கட்டு மற்றும் நாட்றாம்பள்ளி, கரூர் மாவட்டம் – மண்மங்கலம், விழுப்புரம் மாவட்டம் –  விக்ரவாண்டி, கடலூர் மாவட்டம் –  வேப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் – பூதலூர்,  திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் (மேற்கு) என 25 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முறையாக செயல்பட்டு வருகின்றன.
 கடலூர் மாவட்டம் – குறிஞ்சிப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் – குத்தாலம், திருப்பூர் மாவட்டம் – மடத்துக்குளம் மற்றும் வேலூர் மாவட்டம் – ஆம்பூர் ஆகிய இடங்களில் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் – மாதவரம்  மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் –  சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களுக்கு அலுவலகக் கட்டடம்  கட்டுவதற்கு, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 18  வருவாய் ஆய்வாளர்கள், 98 குறுவட்ட அளவர்கள் மற்றும் 105 கிராம நிருவாக அலுவலர்கள் ஆகியோருக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 4,556 கிராம நிருவாக அலுவலகங்கள் புதுப்பிக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.
 1,481 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கடலோர பேரிடர் இன்னல்கள் குறைப்பு ஐந்தாண்டுத் திட்டத்தில் Coastal Disaster Risk Reduction Project (CDRRP), தற்போது 45 சதவீத பணிகள் 695 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 31.7.2018 – இல் முடிவடையும்.
 திருவள்ளூர்  மாவட்டம் – ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் – வாலாஜாபாத், விழுப்புரம் மாவட்டம் –  மரக்காணம், கடலூர் மாவட்டம் –  புவனகிரி, சேலம் மாவட்டம் – பெத்தநாயக்கன் பாளையம், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர், திருவண்ணாமலை மாவட்டம் – சேத்துப்பட்டு மற்றும் வெம்பாக்கம், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, சிவகங்கை மாவட்டம் – காளையார்கோவில், இராமநாதபுரம் மாவட்டம் – கீழக்கரை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – திருவேங்கடம் மற்றும் கடையநல்லூர் என 15 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முறையாக செயல்பட்டு வருகின்றன.
 திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர், விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர் மற்றும் கண்டாச்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – சூளகிரி, தருமபுரி மாவட்டம் – காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி, சேலம் மாவட்டம் – காடையாம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் – பல்லாவரம், வேலூர் மாவட்டம் – நெமிலி மற்றும் பேர்ணாம்பட்டு, திருநெல்வேலி மாவட்டம் – மானூர் மற்றும் சேரன்மாதேவி, நாமக்கல் மாவட்டம் – குமாரப்பாளையம், ஈரோடு மாவட்டம் – தாளவாடி,  கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி என 16 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முறையாக செயல்பட்டு வருகின்றன.
 சென்னை மாவட்டம் – எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை, மதுரை மாவட்டம் –  மேலூர், கோயம்புத்தூர் மாவட்டம் –  கோயம்புத்தூர் (வடக்கு), விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் என 5 வருவாய் கோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முறையாக செயல்பட்டு வருகின்றன.
2.  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத நிரப்பப்படாத காலியிடங்களை திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்தியதன் மூலமாக, கடந்த 4 கல்வியாண்டுகளில், 27.24 கோடி ரூபாய் செலவில் 30,694 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
 தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் நலவாரியம்” என்ற வாரியத்தின் பெயர், “தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
 20 மாவட்டங்களில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டிடங்கள் 40 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.
 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா  பாடப் புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 4.98 கோடி ரூபாய் செலவில்  73,300 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென் திறன் ஆய்வகங்கள் அமைக்கும்பொருட்டு,  35 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கென கணிப்பொறிகள், சர்வர்கள் மற்றும் மேசை நாற்காலிகள் கொள்முதல் செய்யப்பட்டு,  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தற்போது இந்த ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில்,  64.70 கோடி ரூபாய் செலவில் 38,505 மாணாக்கர்களுக்கு விலையில்லா  மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதால்  3,748 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
 கரூர் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்  மூலம்  இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின்கீழ் 89,158  இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். 
 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு புதியதாக ஒரு கட்டடம் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் “தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்” என்ற ஓராண்டு பகுதி நேர பட்டயப் படிப்பு 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
 தொழிலகப் பாதுகாப்பு மற்றும்  சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்த தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார  இயக்ககத்திற்கென ஒரு பிரத்யேக வலைதளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
 நெய்வேலி, ஓசூர் (சிப்காட்-II) மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருந்தகங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 காஞ்சிபுரம், விழுப்புரம்,  திருவாரூர்,  திருவள்ளூர்  மற்றும் தருமபுரி ஆகிய ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நாமக்கல் மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 
 திருச்சி – மணிகண்டம், விழுப்புரம் – சின்னசேலம், கடலூர் – காட்டுமன்னார்கோவில், திருநெல்வேலி – கடையநல்லூர் மற்றும் திருப்பூர் – உடுமலைப்பேட்டை ஆகிய 5 இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர் பணியிடங்களில் பணியின்போது விபத்து ஏற்பட்டு இறக்கும் நேர்வில் அவர்தம் நியமனதாரருக்கு வழங்கும் நலதிட்ட நிதியுதவி  ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த 15,769 கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில் 50 நடமாடும்  மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான 3 நடமாடும் மருத்துவமனைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
 அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெற ஏதுவாக உரிய வாகன வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
 கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் 50 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் துவக்கப்பட்டுள்ளது.
 கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடவசதிக்கென, காஞ்சிபுரம் மாவட்டம் – தையூர் எழுச்சூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – கோட்டப்பட்டு ஆகிய இடங்களில் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
 தஞ்சாவூர் – ஒரத்தநாடு, புதுக்கோட்டை-விராலிமலை, விருதுநகர் – சாத்தூர், பெரம்பலூர்-ஆலத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம் ஆகிய 5 இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு, 744 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
3. தகவல் தொழில் நுட்பவியல் துறை
 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2.9.2011 முதல் ஒளிபரப்புச் சேவையைத் தொடங்கி, 26,246 உள்ளூர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் மூலம் 70 ரூபாய் மாதச் சந்தாவில், 70 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு 90 முதல் 100 சேனல்களை வழங்கி வருகிறது.
 பொது சேவை மையங்கள் வாயிலாக, பொது மக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்பட்டு வருவதன் மூலம் ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய தேவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
 அரசுத் துறைகளின் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்களை உருக்குலைப்பு மற்றும் ஊடுருவலிலிருந்து பாதுகாத்து மேம்படுத்தப்பட்ட சேவைகளை  குடிமக்களுக்கு துரிதமாக வழங்க ஏதுவாக 93 வலைதளங்கள் தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  முதற்கட்டமாக ஐந்து வலைதளங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
 அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடைய, திட்டங்களின் செயல்பாட்டினை காலமுறை அடிப்படையில் கண்காணிக்கும்  ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருள், அதாவது Scheme Monitoring Application Software உருவாக்கப்பட்டுள்ளது.
 அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை  இணைக்கும் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பின் இரண்டாம் கட்ட செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் 151 பதிலி இணைப்புகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. 
 மாநில தரவு மையத்தில் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் முழுமையான மேகக் கணினியம் செயல்படுத்துவதற்கு ஏதுவாக ரூ.6.13 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 
 மின்னணு வரைபடக் காப்பக தளம் மூலம் தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பினை உருவாக்குவதற்காக, முதற்கட்டமாக 61 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில்  தமிழ்நாடு மின்னாளுமை இயக்குநரகத்தில்  தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு நிறுவப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
 அரசின் பிற துறைகளிலும் மின் ஆளுமை முயற்சிகளை ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு அரசின் சேவைகளை அளிக்கும் வகையில், மின் ஆளுமை ஊக்குவிப்பு நிதியாக (e-Governance Initiative Fund) ரூபாய் 10 கோடி தமிழ்நாடு மின்னாளுமை முகமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை முகமையால் தகுதி வாய்ந்த மின் ஆளுமை முயற்சிகளுக்கு இந்நிதியிலிருந்து உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
 அரசுத் துறைகளில் மின் ஆளுகை முயற்சிகளை செயல்படுத்த, தகவல் தொழில் நுட்பவியல் ஆற்றல் மற்றும் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட ஒரு தகவல் தொழில் நுட்பவியல் பணி நிலைப் பிரிவு, 98 பணியிடங்களுடன் IT Cadre உருவாக்கப்பட்டுள்ளது.
 அரசு துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளைச் சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலை உயர்த்த, 5000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டிடம் கட்டி, அதில் 40 அடுக்குகளை (Racks)   அமைக்க, 7 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
 அரசின் மின்னாளுமை சேவைகளுக்கான தரவுகளை, மாநில தரவு மையத்திலிருந்து உடனுக்குடன் மற்றொரு இடத்தில் நகல் ஏற்றம் செய்யும் பொருட்டு, 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு  பேரிடர் தரவு மீட்பு  மையம் அமைக்க, பொது  செயல்பாட்டிற்கான உட்கட்டமைப்பு, சென்னை, துறைமுகத்தில் உள்ள BSNL தரவு மையத்தில் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அரசுத் துறைகளின் தேவைக்கேற்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சிறந்த, விரைவான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட மின்னஞ்சல் தொடர்பினை பல்வேறு இயங்குதள உதவியுடன் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மின்னஞ்சல் தொகுப்பு, தேசிய தகவல் மையம் மூலம் செயல்பாட்டில் உள்ளது.
 மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான மேகக் கணினி சார்ந்த சேவைகள்  மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை  குறைந்த கட்டணத்தில் வழங்கும் வகையில்,  ஆணைகள் வெளியிடப்பட்டு, மைக்ரோசாப்ட் (இந்தியா) நிறுவனம் முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தொழில் முனைவோர்களுக்கு அந்நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்கத் தளத்தை (Software Development Platform) மூன்று மாத காலத்திற்கு கட்டணம் ஏதுமின்றி வழங்குவதோடு, மேகக் கணினியம் மற்றும் நகர்தன்மை (Cloud Computing and Mobility) தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை தொழில் முனைவோருக்கு அளிக்க ஏதுவாக இணையதளம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
 தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம், விரிவான இணையவழி களஞ்சியம் ஒன்றினை உருவாக்கும் வகையில், ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், அரியவகை நூல்கள் மின்னுருவாக்கம், ஆவணம் மற்றும் ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகள் ஆகியவை இரண்டு ஆய்வு வளமையர்களை கொண்டு சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரசு கேபிள் டி.வி. வாயிலாக, மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் அதாவது Broadband Services மற்றும் இதர இணையதள சேவை இணைப்புகள், முதற்கட்டமாக, 1,100 இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் உருவாக்குவதற்காக முழுமையான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 அரசு இ-சேவை மையங்கள் வழியாக கூடுதலாக மேலும் 300 சேவைகள் கண்டறியப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
 இணைய வழி தொலைக்காட்சி சேவை (Internet Protocol Television-IPTV) வழங்க, வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களை வாங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா மூன்று துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.