விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016,

சென்னை : உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் 5-ம் தேதி இரவு சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காரும் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பழனியம்மாள், ஷர்மி, ஜெயந்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், பரவக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில் ஆறு நபர்கள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.