விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

சனி, அக்டோபர் 22,2016,

சென்னை ; விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் என்று புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை வருமாறு; 

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவி செய்பவர்கள் மற்றும் கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல் முகவரியை கேட்டு கொண்டு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும். இடர்பாடுகளில் உதவியவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்க வேண்டும். இந்த சன்மானம் மற்றவர்கள் துயரத்தில் இருக்கும் போது உதவும் நோக்கத்திற்கு ஆர்வமூட்டுவதாக அமைய வேண்டும். உதவி செய்தவர்கள், எந்த சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களை பெயர்களை கேட்டும் முகவரிகளை கேட்டும் நேரிலோ, தொலைபேசி மூலமாக கட்டாயப்படுத்தக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்தினால் குறிப்பிட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்தினால் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அக்கறை செலுத்தாத டாக்டர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு வழிகாட்டுதல்களுக்கு ஏற்றவாறு தமிழக அரசு இந்த அரசாணை பிறப்பித்துள்ளது.