விருத்தாசலத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு

விருத்தாசலத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு

திங்கட்கிழமை, ஏப்ரல் 11, 2016,

விருத்தாசலத்தில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை மற்றும் கழக நிர்வாகிகள் மலர்க்கொத்துகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விருத்தாசலம் – ஆலிச்சிக்குடி பைபாஸ் சாலையில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று பிற்பகலில் விருத்தாசலம் சென்றடைந்தார்.

ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை, கழக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை, அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருண்மொழி தேவன், திரு. தாமரை எஸ். ராஜேந்திரன், திரு. R.T. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சந்திரகாசி, திரு. மருதராஜா ஆகியோர் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வந்திறங்கிய ஹெலிகாப்டரை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர். இதற்கு, முதலமைச்சர் முழு ஒத்துழைப்பு நல்கினார். பின்னர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் தமது இரு விரல்களை உயர்த்தி காண்பித்து, கழகத் தொண்டர்களின் உற்சாக வாழ்த்தொலி முழக்கங்களுக்கிடையே பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியில் இருமருங்கிலும் திருண்டிருந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த 7 குருக்கள்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். செண்டை மேளம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் எழுச்சியுரைக்குப் பின்னர், பிரச்சாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை முதலமைச்சர் வெளியிட, அதனை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர். ராஜேந்திரன், தன்னை அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.