விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம் ரத்து

விருத்தாசலத்தில் வேட்பாளர் மாற்றம் எதிரொலி : திமுகவினர் சாலை மறியல், இருவர் தீக்குளிக்க முயற்சி, ஸ்டாலின் பிரசாரம்  ரத்து

புதன், ஏப்ரல் 20,2016,

விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம், திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.
 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தங்க.ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தங்க.ஆனந்தனை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். இந்த நிலையில், தங்க.ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக பொருளர் பாவாடை கோவிந்தசாமி விருத்தாசலம் தொகுதிக்கான புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 திமுகவினர் சாலை மறியல்:

இதற்கிடையே, தங்க.ஆனந்தனை ஆதரித்து நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க திரண்டிருந்த திமுகவினர், வேட்பாளர் மாற்றத்தை அறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுக நிர்வாகிகள் சிலர் வேட்பாளர் திடீர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேடையில் விமர்சித்துப் பேசினர்.
 இந்த நிலையில், விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்த மு.க.ஸ்டாலின், புறவழிச் சாலை வழியாக நெய்வேலிக்குச் சென்றார். இதனால் தொண்டர்கள் விரக்தியடைந்தனர்.

இந்த நிலையில் வேட்பாளரை திடீரென மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்க.ஆனந்தனின் ஆதரவாளர்கள் விருத்தாசலம் பாலக்கரை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வேட்பாளர் தங்க.ஆனந்தனும் கலந்துகொண்டார். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டனர். உடனிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். விருத்தாசலம் வேட்பாளர் மாற்றமும், மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடைபெறுவதால் அங்கு பரபரப்பு நிலவியது.